ஊட்டி:''பா.ஜ., இளைஞர் அணியை உடைக்க, தி.மு.க., தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தி.மு.க., மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்,'' என, பா.ஜ., மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா தெரிவித்தார்.ஊட்டியில் நீலகிரி மாவட்ட பா.ஜ., சார்பில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின், மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க.,வினர் எங்களது இளைஞர் அணி நிர்வாகிகளை பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர். எந்த காரணமும் இல்லாமல் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ., இளைஞர் அணியை உடைக்க வேண்டும் என்ற தவறான செயலை, தி.மு.க.,வினர் கையில் எடுத்துள்ளனர். இதை கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம்.இதுவரை இளைஞர் அணி நிர்வாகிகள் எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராஜாவின் அவதுாறு பேச்சு குறித்து பல மாவட்டங்களில் புகார் அளித்தும், சி.எஸ்.ஆர்., கூட போலீசாரிடமிருந்து வாங்க முடியவில்லை. நீலகிரி எம்.பி., ராஜா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.வரும் 2024 லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு சரியான பதிலடி கொடுக்க நீலகிரி மக்கள் தயாராக உள்ளனர். ராஜா வேறு தொகுதியை தான் பார்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.