சேலம்;சேலம், செவ்வாய்பேட்டையில் இயங்கி வந்த பி.எப்.ஐ., அலுவலகத்துக்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.நாடு முழுவதும் இயங்கி வந்த, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது.இதையடுத்து, பி.எப்.ஐ., மற்றும் அதை சார்ந்த சில அமைப்புகளுக்கு, ஐந்தாண்டு தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன் காரணமாக, சேலம் மாவட்டம், மாநகர் பகுதியில் அசம்பாவிதம் தவிர்க்க, பாதுகாப்பை பலப்படுத்தி போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.பி.எப்.ஐ., அமைப்பு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் நேற்று முன்தினம் போராட்டக்குழு சார்பில் குறிப்பிட்ட முஸ்லிம் பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். அத்துமீறிய அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, 71 பேரை கைது செய்தனர்.இந்நிலையில், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பு அலுவலகத்துக்கு நேற்று, 'சீல்' வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில், தாசில்தார் செம்மலை முன்னிலையில் செவ்வாய்பேட்டை, காஸ்வே சாலையில் உள்ள பி.எப்.ஐ., அலுவலகத்துக்கு சென்றனர்.கட்டட உரிமையாளர் மணிகண்டன் முன், அலுவலக சுவற்றில், மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவு நகல் ஒட்டப்பட்டு, அலுவலகத்தை பூட்டி 'சீல்' வைத்தனர்.