கள்ளக்குறிச்சி-'ஏரியில் எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, கலெக்டர் எச்சரித்தார்.
கள்ளக்குறிச்சியில், கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., விஜய்பாபு, வேளாண் இணை இயக்குனர் வேல்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்கள் முருகேசன், சிவ சவுந்தரவள்ளி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அருட்பெருஞ்ஜோதி, கால்நடை இணை இயக்குனர் சாந்தி, ஆர்.டி.ஓ.,க்கள் பவித்ரா, யோகஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கள்ளக்குறிச்சி நகர பகுதிக்குள் கரும்பு லோடு வாகனங்கள் வராமல் இருக்க, சோமண்டார்குடி வழியாக கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.விவசாயிகளுக்கு தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவை தொகையினை தமிழக அரசு வழங்க வேண்டும். அரசு சார்பில், ஏரிகளில் மரக்கன்றுகள் நடப்படுவதில்லை.சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் வழி தடத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு குறைவான இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை முறையாக தெரிவிப்பது இல்லை உட்பட பல்வேறு குறைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.கலெக்டர் பேசுகையில், 'ஏரிகளில் எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.நெல் விதைகள், சிறுதானிய விதைகள், யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் போதுமான அளவுக்கு இருப்பில் உள்ளது' என்றார். பின், கால்நடை மருத்துவ செயலியை அறிமுகப்படுத்தினார்.