காஞ்சிபுரம்: அரசு நிலங்களை ஆக்கிரமித்து போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்கின்றனர். அதே வேளையில், வீட்டு மனைகளுக்கு இடையே பூங்கா, நுாலகம் என பொது பயன்பாடிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி இட ஒதுக்கீடு நிலங்களும் விற்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதை தடுக்க காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

சுற்றறிக்கை
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலங்களின் மதிப்பு காரணமாக, அரசு நிலங்களை ஆக்கிரமித்து, போலியான ஆவணங்கள் மூலம், விற்பனை செய்கின்றனர்.
அதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதால், நில நிர்வாக ஆணையர் நாகராஜன் கலெக்டர்கள், ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறைகளுக்கு கடந்த 26ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பூங்கா, நுாலகம் என பொதுபயன்பாடிற்கு என உள்ள திறந்தவெளி இட ஒதுக்கீடு நிலங்கள் பலவும் இன்னும் தனியார் பெயரிலேயே உள்ளன. இதுபோன்ற பல இடங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. வருவாய் துறையின் நில ஆவணங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பெயர் இல்லை. இந்த நிலங்களை பராமரிக்காததால், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பெயர்களில் இந்த அரசு நிலங்களின் விபரங்களை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
இந்த சுற்றறிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி துறை, பேரூராட்சி துறை ஊழியர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, கலெக்டர் அறிவுறுத்தியதாவது:
ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி நிலங்களை ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஆய்வு செய்ய வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளுக்கு எழுதி கொடுக்கப்பட்ட பத்திரங்களை கொண்டு, அந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என கண்டறிந்து, வருவாய் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். வருவாய் துறையினர், ஓ.எஸ்.ஆர்., நிலங்களுக்கான பட்டாவை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பெயருக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அறிவுறுத்தி பேசினார்.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி துறை கமிஷனர்கள் ஓ.எஸ்.ஆர்., நிலங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

சிக்கிய டி.ஆர்.ஓ.,க்கள்
ஓ.எஸ்.ஆர்., நிலங்களை சிலர் விற்பனை செய்தது மட்டுமல்லாமல், சிலர் அந்த நிலங்களுக்கு பட்டா பெற்று, நில எடுப்பு அலுவலகங்களில் கோடிக்கணக்கில் இழப்பீடும் பெற்றுள்ளனர். உதாரணமாக, 2021ம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதுார் தாலுகா பீமந்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்காக நில எடுப்பு செய்யும்போது, ஓ.எஸ்.ஆர்., நிலங்களை அரசுக்கே விற்று, 30 கோடி ரூபாய் மோசடி நடந்தது.
இந்த விவகாரத்தில், அப்போது நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், கடந்த ஜூலை மாதம் வல்லம்- வடகால் சிப்காட்டுக்கு நிலம் எடுக்கும்போதும், ஓ.எஸ்.ஆர்.,நிலங்களை விற்று 26 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்று ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது. இந்த விவகாரத்திலும் அப்போது நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ராஜேந்திரன் உள்ளிட்ட 11 மீது சி.பி.சி.ஐ.டி.,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓ.எஸ்.ஆர்., நிலம் என்றால் என்ன?
தரிசு நிலங்களை லே அவுட் போட்டு வீட்டு மனைகளாக மாற்றும் போது, 30 சதவீதம் ஒதுக்கப்பட்டு, அதில், பூங்கா, கோவில், சாலை உள்ளிட்டவைக்கு இடம் ஒதுக்க வேண்டும். அந்த இடத்தை, சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பெயருக்கு பதிவு செய்து தர வேண்டும். அவ்வாறு பதிவு செய்த பிறகும் சில நில உரிமையாளர்கள், பழைய பட்டாவை வைத்து, புதிய பத்திரம் தயாரித்து, ஓ.எஸ்.ஆர்., நிலத்தை விற்று மோசடி செய்கின்றனர்.
மோசடி நடப்பது எப்படி
தரிசு நிலங்களை 'லே அவுட்' போடும் போது, நகர ஊரமைப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறும்போது, வீட்டு மனைகளுக்கு இடையே ஒதுக்கப்படும் சாலை, பூங்கா போன்ற இடங்களை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் பெயர்களுக்கு எழுதி தர வேண்டும். ஆனால், அவ்வாறு வழங்க வேண்டிய நிலங்களின் பட்டா விவரம், 'லேஅவுட்' போட்டவர்களின் பெயரிலையே இன்னும் உள்ளது. அவற்றை மீண்டும் பத்திரம் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற மோசடிகளை களையவே, இப்போது ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மீட்கும் பணிகளை நில நிர்வாக ஆணையர் முடுக்கி விட்டுள்ளார்.