தாராபுரம்: இந்து மக்கள் கட்சி சார்பில், தாராபுரம் துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடக்கிறது. நேற்றைய விழாவில் பங்கேற்ற, அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: அமைச்சர்கள் ராமச்சந்திரன், பொன்முடி உள்ளிட்டோர், தொடர்ந்து பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசி வருகின்றனர்.
இதை தட்டி கேட்க வேண்டிய திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் மீது, அவதுாறு பரப்பி கொண்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும் காந்தி கொலைக்கும் எவ்வித தொடர்புமில்லை. இதேபோல் அவதுாறு பரப்பிய ராகுல், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே திருமாவளவன், சீமான் போன்றோர், இது போன்ற வெறுப்பு பிரசாரத்தை செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் அமைப்பை, ஆதரித்து பேசும் திருமாவளவன், சீமானை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன், துணைத் தலைவர் சங்கர் மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.