தாராபுரம் அருகே தொழிலதிபரை தாக்கி, 34 லட்சம் ரூபாய், 24 பவுன் நகைகளை கொள்ளையடித்த இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்தவர் பாஸ்கரன், 48; தொழிலதிபரான இவர், கடந்த மாதம், 29ம் தேதி தொழில் விஷயமாக, சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு இனோவா காரில் சென்றார். டிரைவரான ஆனைமலையை சேர்ந்த பரத், 24, ஓட்டினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனுார் அருகே, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத ஆசாமி, காரில் சென்ற இருவரையும் தாக்கி விட்டு, பாஸ்கரன் வைத்திருந்த பேக்கை பறித்து சென்றான்.
தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கரன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பேக்கில் வைத்திருந்த, 34 லட்சம் ரூபாய், 24 பவுன் தங்க நகைகளை, மர்ம ஆசாமி பறித்து சென்று விட்டதாக, போலீசில் புகாரளித்தார். தாராபுரம் டி.எஸ்.பி., தனராசு தலைமையிலான தனிப்படை போலீசார், கொள்ளையனை தேடி வந்தனர்.
இந்நிலையில் டிரைவர் பரத் மீது சந்தேகம் அடைந்து விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
பாஸ்கரன் பணம், நகை கொண்டு வருவதை, தனது தந்தையான குமார், ௪௭, என்பவரிடம், பரத் தகவல் தெரிவித்துள்ளார். இருவரும் போட்ட திட்டப்படி, குமார் அவர்களை தாக்கிவிட்டு, பணம் மற்றும் நகை வைத்திருந்த பையை பறித்து சென்றுள்ளார். போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Advertisement