கரூர் மாவட்டத்தை, அமைப்பு ரீதியாக இரண்டாக பிரித்து, புதிய மாவட்ட செயலாளர்களை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நியமித்துள்ளார்.
அ.தி.மு.க.,வின் ஒற்றை தலைமை விவாகாரத்தில், முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர் செல்வம் இடையே, மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே, இரண்டு தரப்பினரும், கட்சி நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, முன்னாள் முதல்வர் பழனிசாமி அ.தி.மு.க.,வின், இடைக்கால பொதுச்செயலாளராக நீடிக்க தடை இல்லை. இதனால், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கரூர், அரவக்குறிச்சி தொகுதிகள் அடங்கிய கரூர் மேற்கு மாவட்டத்துக்கு, இளங்கோ என்பவரை செயலாளராகவும், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகள் அடங்கிய கரூர் கிழக்கு மாவட்டத்துக்கு, டாக்டர் கதிரேசன் என்பவரை செயலாளராகவும், பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
மேலும், மேற்கு மாவட்ட அவைத்தலைவராக சுப்பிரமணியம், குளித்தலை நகர செயலாளராக அருண்மொழி தேவன், ஒன்றிய செயலாளராக செல்வராசு ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.