கரூர் அருகே, நெரூர் தென்பாகம் பஞ்சாயத்தில், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர் ஒன்றியத்தில், நெரூர் தென்பாகத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. இங்கு, சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் மற்றும் சுற்றுலா தலம் உள்ளது. ஆனால், பல இடங்களில் சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளன. இங்கு போதுமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியாவது:
இங்குள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து கள் ஏற்படுகின்றன. கழிவு நீர் செல்லும் வாய்க்கால்களை, துார்வாருவதில்லை. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. குப்பை அகற்றப்படாமல் பல இடங்களில் தேங்கி உள்ளது.
நெரூர் அக்ரஹார கிளை வாய்க்கால், பராமரிப்பின்றி, பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அரங்கநாதன்பேட்டை, புதுப்பாளையம், மறவாப்பாளையம் பகுதியில் அரசு மருத்துவமனை இல்லாததால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் மேற்கண்ட பிரச்னைகளுக்கு பஞ்., நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.