மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரயில் குளித்தலையில் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குளித்தலை மக்கள் நல வாழ்வு சங்க தலைவர் கிராமியம் நாராயணன், செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:
சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள குளித்தலை ரயில் நிலையத்தில் நின்று சென்ற மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரயில், சமீப காலமாக அதிகாலையில் குளித்தலையில் நின்று செல்வதில்லை. இதனால், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட நெடுந்துாரத்தில் இருந்து வரும் குளித்தலை சுற்று வட்டார பகுதிக்கு வரும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள், 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரூர் அல்லது திருச்சி ரயில் நிலையங்களில் இறங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள 5 தாலுகா மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த விரைவு ரயிலை குளித்தலையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, சென்னையில் இருந்து தஞ்சை வழியே திருச்சி வரும் சோழன் விரைவு ரயிலை, குளித்தலை வழியாக கரூர் வரை நீட்டிக்க வேண்டும்.
சேலம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு ரயில் அல்லது வாராந்திர ரயிலில் ஒன்றினை சேலம், நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி வழியே ராமேஸ்வரம் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சியில் இருந்து குளித்தலை கரூர் வழியே சீரடி மற்றும் மும்பைக்கு விரைவு ரயில் விட வேண்டும்.
குளித்தலை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு நேரம் காலையில் நான்கு மணி நேரமும், மாலையில் நான்கு மணி நேரமும் ஒதுக்க வேண்டும். தற்போது காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே முன்பதிவு மையம் செயல்படுகிறது. இதே நேரத்தில் தட்கல் டிக்கெட் புக்கிங் மற்றும் ரயில் டிக்கெட் வழங்கப்படுவதால் முன் பதிவு செய்ய முடியாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.