கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை கோவிலில் ரோப்கார் சேவையை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலையை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் சிவாலயங்களில் முக்கிய ஸ்தலமாக உள்ளது. இந்த மலைக்கோவில் செங்குத்தாக, 1,017 படிகளை கொண்டது. பக்தர்கள், முதியோர், குழந்தைகள் மலை ஏறி, சாமி தரிசனம் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2006 - 11, தி.மு.க., ஆட்சியில் அப்போைதய முதல்வர் கருணாநிதி ரோப் கார் அமைக்க உத்தரவிட்டார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் இறுதி கட்டத்தில் அப்போதைய முதல்வர் பழனிசாமி, அய்யர்மலை ரோப்கார் சோதனை ஓட்டத்தை தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி ரோப்கார் பணிகளை நேரில் ஆய்வு செய்து, டிசம்பர் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். ஆனால், ரோப்கார் பணி முழுமையாக முடிவு பெறாமல் தொய்வு ஏற்பட்டு, பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
எனவே, அய்யர்மலை கோவிலில் ரோப்கார் சேவையை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள், ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.