கரூர்: ''கரூர் மாவட்ட பி.டி.ஓ.,க்கள், தி.மு.க., ஒன்றிய செயலாளர் போல் பணியாற்றுகின்றனர்'' என, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாடினார்.
கரூர் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நலச்சங்கம் சார்பில், தலைவர் விஜயவிநாயகம் தலைமையில், கரூரில் நேற்று கருத்தரங்கம் நடந்தது.
இதில் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியதாவது: கடந்த, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது கட்சி வித்தியாசம் பார்க்காமல், நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் அ.தி.மு.க., உள்ளாட்சி பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில், அரசு அதிகாரிகள் அ.தி.மு.க., பிரதிநிதிகளை மதிப்பதில்லை. பஞ்சாயத்து தலைவர்களை உட்கார வைத்து கூட கலெக்டர் பேசுவதில்லை. கரூர் மாவட்ட பி.டி.ஓ.,க்களோ, தி.மு.க., ஒன்றிய செயலாளர் போல் பணியாற்றுகின்றனர்.
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு, ஏராளமான உரிமைகள் உள்ளன. அதை தட்டி பறிக்கும் போது, கேள்வி கேட்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்க, உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
சங்க கவுரவ தலைவர் கண்ணதாசன், துணைத் தலைவர்கள் மார்க்கண்டேயன், லதா, இணை செயலாளர் பாலமுருகன், சட்ட ஆலோசகர் கலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.