ஈரோடு: ஈரோட்டில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகளை கண்டறிந்த அமைச்சர், இரு அதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பால் வளத்துறை அமைச்சர் நாசர், ஈரோட்டுக்கு நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வந்தார். சித்தோட்டில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தார். பால் வரத்து, பாக்கெட் செய்தல், பிற செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். ஈரோட்டில் தங்கிய அவர், ஈரோட்டில் சென்னிமலை சாலையில் உள்ள, ஆவின் நிறுவனத்துடன் கூடிய, மாவட்ட கூட்டுறவு கால்நடை தீவன உற்பத்தி ஆலையில், நேற்று காலை ஆய்வில் ஈடுபட்டார்.
கால்நடை தீவனம், பேக்கிங் செய்யப்படும் முறை, பாலித்தீன் கவர் விபரம், பதிவேடு பராமரிப்பு போன்றவைகளில் பல குறைபாடுகளை கண்டறிந்தார். தீவன உற்பத்தி தொடர்பாக உயர் அதிகாரிகளுக்குக்கூட சரியான விபரம், சத்து, கலப்பு பொருட்கள் என ஏதும் தெரியாமல், சமாளித்தனர். அவர்களை அமைச்சர் கடிந்து கொண்டார். பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறியதாவது:
தீபாவளிக்காக ஆவின் மூலம் இனிப்பு உள்ளிட்ட பண்டங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதை ஆய்வு செய்து, தரமாக செயல்படுத்த யோசனை தெரிவித்தேன். கடந்த ஆட்சியில், 10 டன் இனிப்பு உள்ளிட்ட பண்டங்கள் கெட்டுப்போனது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்தாண்டு, 85 கோடி ரூபாய்க்கு தீபாவளி இனிப்பு வகை விற்றது. நடப்பாண்டு, 200 முதல், 250 கோடி ரூபாய்க்கு இலக்கு வைத்துள்ளோம். ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்கள் தவிர பிற பொருட்கள் விற்கக்கூடாது. எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு கூறினார்.
'ஆவின் கால்நடை தீவனத்தில் பூஞ்சை ஏற்பட்டதாகவும், அதை மாற்ற மறுப்பதாக தெரிவித்த' கேள்விக்கு ''விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில் பால் பாக்கெட் உற்பத்தி, விற்பனைக்கு அனுப்புதல் பதிவேடு முறைகேட்டில் ஈடுபட்டதாக செயற்பணியாளர் ரவிசந்திரன், ஆவின் பாலகத்தில் வெண்ணெய், நெய், இதர பால் பொருட்கள் இருப்பு குறைவாக, 22,435 ரூபாய் இருப்பதை கண்டறிந்ததால், துணை மேலாளர் முகம்மது முஸ்தபா ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் நாசர் உத்தரவிட்டார். இருவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அமைச்சர் ஆடையை
சுத்தம் செய்த அதிகாரி
ஆவின் கால்நடை தீவன உற்பத்தி ஆலையை அமைச்சர், கலெக்டர் ஆய்வு செய்தனர். அப்போது, 80க்கும் மேற்பட்டோர் வந்தனர். அனைவரின் டைகளிலும் தீவன துாசி படிந்தது. ஆலையைவிட்டு வெளியே வந்த அமைச்சர், 'ஆடை மற்றும் ஷூ துாசியாக உள்ளதே' எனக்கூறியதும், 'உள்ளே வாருங்கள்' என, மூட்டை பேக் செய்யும் இடத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அதிகாரி ஒருவர் ஏர் டியூப் மூலம் அமைச்சர் ஷூ, ஆடையில், காற்றை அழுத்தமாக அடித்து சுத்தம் செய்தார். கலெக்டரின் செருப்பு மற்றும் ஆடைகளையும் சுத்தம் செய்தார். ஒரு கட்டத்தில் சுதாரித்த கலெக்டர், அதிகாரியிடம் டியூப்பை வாங்கி, தனக்குத்தானே 'ஏர்' மூலம் சுத்தம் செய்து கொண்டார்.