வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன்: இந்தியாவில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடி இனத்தவர்கள் 7.5 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல, 5 மடங்கு மக்கள், தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். இந்த பலத்தை பயன்படுத்தி நாட்டின் பிரதமர், மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு இதுவரை நாம் விருப்பம் தெரிவிக்கவில்லை. இனி, வரும் காலங்களில் நம் பலத்தை பயன்படுத்தி, அரசியல் சக்தியாக உருவாக வேண்டும்.
டவுட் தனபாலு: தலித், பழங்குடி சமூகத்தினரை, நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது, பா.ஜ., தான்... ஆனால், 'சமூக நீதி' பேசும், தி.மு.க.,வில், அப்படி யாராவது தலைவர், முதல்வர் பதவிக்கு வர முடியுமா... ஆனாலும், தி.மு.க.,வுக்கு தானே, நீங்க சாமரம் வீசிட்டு இருக்கீங்க.... தலித் மக்களுக்கு பதவி கிடைப்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையோன்னு, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு போட்டியாக, 'காந்தி பிறந்த நாளில் நடக்கவிருந்த மனிதச்சங்கிலி நிகழ்ச்சி, வரும் 11-ம் தேதி நடத்தப்படும்' என, காங்கிரஸ், ம.தி.மு.க., - வி.சி., - தி.க., - முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கம்யூ., கட்சிகள் அறிவித்துள்ளன.
டவுட் தனபாலு: ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில், தி.மு.க., - அ.தி.மு.க., அல்லாத, மக்கள் நலக் கூட்டணியை மீண்டும் உருவாக்குறாங்களோன்னு, 'டவுட்' வருதே!
ம.தி.மு.க., காஞ்சிபுரம் மாவட்ட செயலர் பதவியை ராஜினாமா செய்த வளையாபதி: ம.தி.மு.க., துவங்கிய, 1993ல் இருந்து கட்சியில் பயணித்து வருகிறேன். படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில், 28 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்து உள்ளேன். இந்நிலையில் தலைமை நிலைய செயலர் துரை வைகோ பேசிய பேச்சு, மூத்த நிர்வாகிகளை பெரிதும் வேதனைப்பட வைத்து உள்ளது. எனவே, என் மாவட்ட செயலர் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை தலைமைக்கு அனுப்பி விட்டேன். கட்சி அடிப்படை உறுப்பினராக தொடர்வேன்.
டவுட் தனபாலு: பதவியை ராஜினாமா செய்த நீங்கள் ஏன் கட்சியில் நீடிக்கிறீர் என்பதற்கான காரணத்தை சொல்லவில்லையே... ஒரு வேளை, வைகோ வந்து, 'கட்சியை நீங்க தான் காப்பாத்தணும்' என சொன்னால், மீண்டும் பதவிக்கு வரலாம் என்ற நப்பாசை தான் காரணமோன்னு 'டவுட்' வருதே!