மதுரையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியின், 83வது பிறந்த நாள் விழா நடந்தது.
அதில் அவர், 'தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி என் நண்பர்; அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வோம். ராமர் சேது திட்டத்தை கருணாநிதி ஆதரித்த போது, அதை நான் எதிர்த்தேன். 'அப்போது, ராமர் யார் என கருணாநிதி என்னிடம் கேள்வி எழுப்பினார். மறுநாள் அவர் உடல் நலம் குன்றி, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, 'கெட் வெல் சூன்; ராமர் யார் என தெரிகிறதா?' என வாழ்த்து அனுப்பி, கேள்வி எழுப்பினேன்.'அதே போல, ஈ.வெ.ரா.,வின் தந்தை, தான் பராமரித்த கோவிலை மகன் பராமரிப்பார் என்று உயில் எழுதி வைத்தார். அதன்படி, 25 ஆண்டுகள் தொடர்ந்து கோவிலை பராமரித்தார், ஈ.வெ.ரா., இது, தி.க., வீரமணிக்கு தெரியுமா?' என பேசினார்.
பார்வையாளர் ஒருவர், 'அவங்களை விடுங்க... வருங்கால சந்ததி தெரிஞ்சிக்கட்டும்... இன்னும் நான்கைந்து, 'மேட்டரை' உங்க பாணியில கொளுத்தி போடுங்க...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.