அடையாறு : சாஸ்திரிநகரை சேர்ந்த விமல்ராஜ் மனைவி பானு 29. இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ஓராண்டுக்கு முன் கணவரை பிரிந்த பானு ஏசி மெக்கானிக் ஜெகன்ஜோஸ் 37, என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இருவரும் தினமும் இரவு மது குடித்து சந்தோசமாக இருந்துள்ளனர். இதைப்பார்த்து குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த ஜெகன்ஜோஸ் சிகரெட்டால் குழந்தையின் முகத்தில் சூடுவைத்துள்ளார். பானுவும் குடிபோதையில் குழந்தையை சுவரில் மோதி காயப்படுத்தி உள்ளார்.
செப். 30ம் தேதி செங்கல்பட்டில் வசிக்கும் பானுவின் தாய் கன்னியம்மாள் பேத்தியை பார்க்க வந்த போது குழந்தையின் முதுகில் சிராய்ப்பு காயம் முகத்தில் சிகரெட் சூடு இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். உடனே எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனையில் சேர்த்தார். பின் இதுகுறித்து அடையாறு மகளிர் போலீசில் கன்னியம்மாள் புகார் அளித்தார். குழந்தையிடம் விசாரித்து பானு மற்றும் ஜெகன்ஜோஸ் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அத்துடன் குழந்தையை பாட்டி கன்னியம்மாள் வசம் ஒப்படைத்துள்ளனர்.