நாகர்கோவில் : நேற்று காந்தி ஜெயந்தி தினத்தில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அவரது அஸ்தி பீடத்தில் விழுந்த சூரிய ஒளியை ஏராளமானோர் பார்த்து அஞ்சலி செலுத்தினர்.
காந்தியடிகளின் அஸ்தி கலசம் 1948 பிப்.12- ல் கன்னியாகுமரி எடுத்துவரப்பட்டு முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. முன்னதாக அவரது அஸ்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடற்கரையில் வைக்கப்பட்ட இடத்தில் காந்தி நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 1954 ஜூன் 20-ல் பணி துவங்கிய நிலையில் 1956 அக். 30- ல் திறக்கப்பட்டது.
காந்தியடிகள் இறந்த போது 79 வயதை குறிக்கும் வகையில் இந்த மண்டபம் 79 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி தினமான அக். 2 ல் அவரது அஸ்திபீடம் இருந்த இடத்தில் சூரிய ஒளி விழும் வகையில் மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த ஒளி விழுந்த நேரத்தில் ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் இசைக்கப்பட்டது.
கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ், எஸ்.பி. ஹரிகிரண்பிரசாத், அதிகாரிகள் பங்கேற்றனர். ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக பெண்கள் ராட்டையில் நுால் நுாற்றனர். மேகமூட்டம் காரணமாக சூரிய ஒளி வெளிச்சம் குறைவாக இருந்தது.