வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை : ''மறைந்த முதல்வர் காமராஜர் குறித்து தி.மு.க., மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டனத்துக்குரியது,'' என, மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றிய வளாகத்தில் மஹாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு மட்டுமல்ல, மக்களை பாதிக்கும் முடிவுகளை யார் எடுத்தாலும், காங்., எதிர்ப்பு குரல் கொடுக்கும்.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு அறிவிப்பு வந்த போது, காங்., மாநில தலைவர் அழகிரி தான் முதன் முதலில் எதிர்த்தார். மறைந்த முதல்வர் காமராஜர் குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டனத்துக்குரியது.
![]()
|
கடந்த, 2019ல் மத்திய அரசு மதுரை விமான நிலைய ஓடுதளத்தை, 'அண்டர்பாஸ்' முறையில் செயல்படுத்த திட்டமிட்டனர். அதனால் கூடுதல் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டது.அதற்காக தான் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடக்காமல் இருந்தது. பட்ஜெட் அதிகரிப்பால் பழைய முறையிலேயே விரிவாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், மாநில அரசு, நிலங்களை ஒப்படைக்கவில்லை என, மத்திய அரசு கூறுகிறது.
மதுரை விமான நிலையத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது. 24 மணி நேர சேவை இல்லாததால் இரவு 9:00 மணிக்கு, நிலையம் மூடப்படுகிறது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை அதிகரிக்க வேண்டும் என, உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.