நாட்டின் சுத்தமான நகரங்களின் பட்டியலில், தாம்பரம் 288வது இடத்தைப் பிடித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் அகற்றுதல் பணிகள் மேம்படாததால், செங்கல்பட்டு மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், பட்டியலில் மோசமான இடத்தைப் பிடித்து பின்தங்கியுள்ளன.

தேசிய அளவில், துாய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை, மக்கள் தொகை அடிப்படையில் வகைப்படுத்தி, அவற்றை ஊக்குவிக்கும் வகையில், விருது வழங்கும் திட்டம், 2016ல் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, பல்வேறு பிரிவுகளில் சுத்தமாக இருக்கும் நகரங்களின் தரவரிசை பட்டியலை, ஒவ்வொரு ஆண்டும், மத்திய நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
கடந்த 2016ல், வெறும் 73 நகரங்களில் எடுக்கப்பட்ட இந்த சர்வே, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தது. 2017ல், 434 நகரங்களிலும், 2018ல் 4,203 நகரங்களிலும், 2019ல், 4,237 நகரங்களிலும், 2020ல், 4,242 நகரங்களிலும், 2021ல், 4,320 நகரங்களிலும் கணக்கெடுக்கப்பட்டது.
மக்கள் தொகை அடிப்படையில், ஐந்து வகைகளில் நகரங்களை பிரித்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிக மக்கள் தொகை உடைய நகரங்கள், 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையுள்ள நகரங்கள், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையுள்ள நகரங்கள், 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையுள்ள நகரங்கள், 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் என, பிரிக்கப்பட்டு உள்ளன.
இந்த தரவரிசை பட்டியலில், ஒரு லட்சத்துக்கும் குறைவான நகரங்களை, ஐந்து மண்டலங்களாக பிரித்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம் தவிர மற்ற நகரங்கள் அனைத்தும், தென் மண்டல தரவரிசை பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரையில், 1 லட்சத்துக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நகராக உள்ளது. எனவே, நாட்டின் 382 நகரங்களின் தரவரிசையில், 7,500 மதிப்பெண்களுக்கு 2,202 மதிப்பெண்கள் பெற்று, 288வது இடத்தை தாம்பரம் பிடித்துள்ளது.

அதேபோல், பல்லாவரம் நகராட்சி, 361வது இடத்தை பெற்றுள்ளது. செங்கல்பட்டு நகராட்சியை பொறுத்தவரையில், 1 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரம் என்பதால், தென்மண்டல அளவிலான தரவரிசையில், 201 நகரங்களில், 42வது இடத்தை பிடித்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி, மாவட்டத்தின் தலைமையிடமாக விளங்குகிறது. இருப்பினும், நகரில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் செயல்படாததால், நகரின் அனைத்து பகுதிகளிலும், சாக்கடை துர்நாற்றமும், குப்பை குவியலுமாக உள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரிந்து, 2019ல் செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகி மூன்றாண்டுகள் ஆன நிலையில், நகரை சுத்தமாக பராமரிக்கும் பணிகளில், நகராட்சி நிர்வாகம் தொய்வுடன் இருப்பதை, இந்த தரவரிசை காட்டுகிறது.மத்திய நகர்ப்புற அமைச்சகம் பல்வேறு பிரிவுகளின் கீழ், நகரங்கள் எந்த அளவுக்கு சுத்தமாக உள்ளன என்பதை தரம் பிரிக்கிறது.
அந்த வகையில், திடக்கழிவு மேலாண்மை, பொதுமக்களின் கருத்து, சுத்தமான காற்று, 'பிளாஸ்டிக்' தடை, சாலைகளின் துாய்மை, பொது கழிப்பறை போன்றவற்றை அளவீடுகளாக வைத்து ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே, செங்கல்பட்டு நகராட்சிக்கு, 42வது இடம் வழங்கப்பட்டுள்ளது. நகரின் பொது கழிப்பறைகள், செங்கல்பட்டு பேருந்து நிலையம், மருத்துவக் கல்லுாரி, நகரின் முக்கிய சந்திப்புகள் என, முக்கிய இடங்களில் குப்பை குவியலை அன்றாடம் பார்க்க முடிகிறது.
இதேபோல், மதுராந்தகம் நகராட்சியை பொறுத்தவரையில், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வசிக்கும் நகரங்கள் வகைப்பாட்டில் உள்ளது. 326 நகரங்களில், 84வது இடம் பெற்றுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் துாய்மை நகர பட்டியல் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரை சுத்தமாக வைத்திருக்க, நகராட்சி அதிகாரிகள் இத்தனை சிரமப்படுவது ஏன் என, நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
கவுன்சிலர்களின் பங்கு முக்கியம்
முந்தைய ஆண்டுகளில், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், துாய்மை பணிகள் பலவும் படுமோசமாகவே இருந்தன. இந்நிலையில், ஒவ்வொரு வார்டுக்கும், இப்போது கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்தந்த வார்டுகளில் உள்ள துாய்மை பணிகளை, கவுன்சிலர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் கண்காணிக்க வேண்டும். அடுத்த ஆண்டு, இந்த தரவரிசையில், தாம்பரம் மாநகராட்சி, முதல் 100 இடங்களுக்குள் வருவதற்கு, கவுன்சிலர்களின் பங்கு மிக முக்கியம்.