மதுரை : 'சிரத்தையுடன் துர்கையிடம் சரணடைந்தால், நம் துன்பம் எல்லாம் அகலும்' என சொற்பொழிவாளர் ரமணன் பேசினார்.மதுரையில் நவராத்திரி உற்ஸவத்தை முன்னிட்டு சின்மயா மிஷன் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா வரவேற்றார்.'தும் துர்காயை நம' என்ற தலைப்பில் ரமணன் பேசியதாவது: துர்கை என்றாலே துன்பத்தை நீக்குபவள் என்று அர்த்தம். பக்தர்களின் பாவங்களை போக்கி தைரியத்தை அருள்பவள் துர்கை. 'ஓம் தும் துர்காயை நமஹ' என்பவர்கள் விஷ்ணுவிற்கு நிகராக உணர்வார்கள். நாம் உள்ளம் உருகி துர்கையை வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.
நாம் தவறான வழியில் சென்றால் தடையை ஏற்படுத்தி, நல்ல பாதைக்கு அழைத்து செல்வாள், அம்பிகை.நமக்கு வரும் துன்பங்கள், நம்மிடம் இருந்து தான் உருவாகும். எனவே, நம்மை, நம்மிடம் இருந்து பாதுகாக்க துர்கையை சரணடைய வேண்டும். அவளை வணங்கினால், நமக்கு தாயாக இருந்து வீரத்தையும், ஞானத்தையும் போதிப்பாள். சக்தியை, பக்தியுடன் போற்றினால், பயம் எல்லாம் நீங்கும். நலமாக வாழ அறிவு மட்டும் போதாது, அம்பிகையின் அருளும் வேண்டும். அவளின் அருள் இருந்தால், கேட்ட வரம் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.