
ஏழுமலையானைப் போற்றுவோம் என்ற தலைப்பில் நேற்று சென்னையில் பரதாஞ்சலி நாட்டிய பள்ளிக்குழந்தைகள் நிகழ்த்திய நாட்டிய நாடகத்தின் கருத்தில், காட்சி அமைப்பில், நடனத்தில், பிரம்மாண்டத்தில் மனதை பறிகொடுத்த பார்வையாளர்கள் நிகழ்வின் முடிவில் ஒரு சேர எழுந்து நின்று கைதட்டி மகிழ்ந்து பாராட்டினர்.

ஏழை எளிய பெண்களின் முன்னேற்றத்திற்காக கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன் துவக்கி நடத்திவரும் ‛சமுதாய அறக்கட்டளை அமைப்பின் நிதி முன்னேற்றத்திற்காக இந்த நாட்டிய நாடகம் நடைபெற்றது.

பரதாஞ்சலி நாட்டிய குழு சார்பாக அதன் தலைவர் அனிதா குஹா இந்த நாட்டிய நாடகத்தை அற்புதமாக வடிவமைத்திருந்தார்.திருமலை திருப்பதி சீனிவாசப்பெருமாளின் பெருமையைப் போற்றும் இந்த நாட்டிய நாடகத்தில் பெருமாளின் திருக்கல்யாணம்,அவர் ஆதிசேஷன் மீது நடனமாடுவது,பிரம்மோற்சவ பவனி என்று பல காட்சிகள் பிரமாதமாக இருந்தது. பார்வையாளர்கள் பகுதியில் இருந்து பெருமாள் தேவியர் சமேதரராய் நடந்துவந்து மேடையேறி அனைவருக்கும் அருள்பாலிப்பது போன்ற காட்சி பலத்த கைதட்டலை பெற்றுத்தந்தது.

உன் அடி நிழலில் ஒரு நொடி நின்றிட அருள்வாய் பெருமாளே என்ற வளமான தமிழ் வார்த்தைகளுக்கு ஏற்ப நடனமாடியவர்கள் பார்வையாளர்களின் உள்ளத்தை பக்தியால் உருக்கிவிட்டனர்,மீண்டும் இந்த நாட்டிய நாடகம் எங்காவது நடந்தால் தவறவிடாது பார்த்துவிடுங்கள்

-எல்.முருகராஜ்