அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
பதவிக்கும், பணத்துக்கும் தன்னை விற்பனை செய்து கொள்ளும் சுயநலமிகளும், பொருளாதாரத்தை கொண்டு போலியாக திரட்டப்படும் கூட்டத்தின் பக்கம் தலையை காட்டுவதே, தங்களுக்கு அரசியல் ஆதாயம் தரும் என நம்பும் முதுகெலும்பு இல்லாதவர்களும், பழனிசாமிக்கு ஒரு தற்காலிக சுகத்தை மட்டும் தான் தர முடியும்.
'டயலாக்' எல்லாம் சூப்பரா இருக்கு... ஆனா, அ.தி.மு.க.,வில் நடக்கிற விஷயங்கள், நீங்கள் ஆதரவு தெரிவிக்கிற பன்னீருக்கு சாதகமா இருக்கிற மாதிரி தெரியலையே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள், 205 பேரும் பணிநீக்கம் செய்யப்படுவதாக, பல்கலை நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 12 ஆண்டுகளாக உழைத்தவர்களை மனிதநேயமின்றி பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அரசு பணி அனைத்தும், தேர்வு நடத்தி தான் நிரப்பப்படுகின்றன... இவர்களை நிரந்தரம் செய்தால், பல துறைகளிலும் அப்படி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமே!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி:
தமிழகத்தில் தான் நாத்திக பிரசாரம் மேலோங்கி இருந்தது. அது, உடைத்து எறியப்படுவதாலும், ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சியை பொறுக்க முடியாமலும், தி.மு.க., அரசு, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறது. அதற்கு, சீக்கிரம் மக்கள் பதிலடி கொடுப்பர்.
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்துகிறது என்றதுமே, வி.சி., உள்ளிட்ட கட்சிகள், மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதை பார்த்தாலே, ஆர்.எஸ்.எஸ்.,சை கண்டு, திராவிட கட்சிகள் பயப்படுகிற மாதிரி தெரியுதே!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில், முறைகேடில் ஈடுபட்டு, அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடம் இருந்து, ரேஷன் கடைகளுக்கு பருப்பு மற்றும் எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளனர். தரமற்ற பொங்கல் பரிசை, மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதல்வர் ஸ்டாலின் எடுப்பதாகக் கூறிய கடும் நடவடிக்கை இது தானா?
நிறுவனம் செய்த தவறுக்கு, 'பிராயசித்தம்' செய்திருக்கும்... அதனால, ஆட்சியாளர்களின் ஆசி கிடைச்சிருக்கும்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
கடந்த 2021- - 22ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணியரால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில், தாஜ்மஹாலை பின்னுக்குத் தள்ளி, தமிழகத்தின் மாமல்லபுரம் சிற்பங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன. மாமல்லபுரத்தின் சிறப்புகளை மேலும் உலகம் அறிந்து கொள்ள, சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
தமிழகத்துல சுற்றுலா துறைக்கு ஒரு அமைச்சர் இருக்காரு... அவரு காதில நீங்க சொல்றது கண்டிப்பா விழும்னு நம்புவோம்!