தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின், 154வது பிறந்தநாளை ஒட்டி, கரூர் மாவட்டத்தில் அந்தந்த பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
வாங்கல், குப்புச்சிபாளையம் பஞ்சாயத்தில் தலைவர் வசந்தி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், மகளிர் திட்டத்தின் கீழ், 17 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, தலா ஒரு லட்ச ரூபாயை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.
தொடர்ந்து, தமிழக அரசின் மதிய உணவு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், பொக்கிஷம், பாலம் திட்டம், தங்க தந்தை திட்டம் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் விளக்கம் அளித்து பேசினார்.
இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ., லியாகத், திட்ட இயக்குனர் மந்திராச்சலம், கரூர் ஆர்.டி.ஓ., ரூபினா, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் ராதிகா உள்பட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் திருக்காம்புலியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டுத்திருக்காம்புலியூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் கார்த்திக் தலைமை
வகித்தார்.
இதில், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள், பஞ்., பகுதியில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், நுாறு நாள் திட்ட பணிகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. பஞ்., உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
*குளித்தலை, தோகைமலை ஒன்றியங்களில் 33 பஞ்., களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
பொய்யாமணி பஞ்., தலைவர் பாலன், இனுங்கூர் பஞ்., தலைவர் குமார், நல்லுார் பஞ்., தலைவர் கலா குணசேகரன், இரணியமங்கலம் பஞ்., தலைவர் ரம்யா சரவணன், சத்தியமங்கலம் பஞ்., தலைவர் பாப்பாத்திபிச்சை, வதியம் பஞ்., தலைவர் குணாலன், குமாரமங்கலம் பஞ்., தலைவர் மகேந்திரன், ராஜேந்திரம் பஞ்., தலைவர் ரெத்தினவள்ளி, கே.பேட்டை பஞ்., தலைவர் தாமரைசெல்வி, கூடலுார் பஞ்., தலைவர் அடைக்கலம் ஆகியோர் தலைமையில் அந்தந்த பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் அந்தந்த பகுதிகளில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.