விடுதலை வேட்கையை விதைத்த வீர நாயகன் சுப்பிரமணிய சிவா-| Dinamalar

விடுதலை வேட்கையை விதைத்த வீர நாயகன் சுப்பிரமணிய சிவா-

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (6) | |
ஒருபுறம் வறுமை விரட்டியது மறுபுறம் தொழு நோய் வாட்டியது இருந்தும் இந்த இரு புறத்தாக்குதலையும் பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் நடையாய் நடந்து தனது வீராவேச பேச்சால் தேசபக்திகனலை மூட்டி அந்த தியாக வேள்வியிலேயே தன்னை 41 வயதிலேயே கற்பூரமாக கரைத்துக் கொண்ட விடுதலைப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 138 வது பிறந்த நாள் நாளை வருகிறது.சிவம் பேசினால் சவமும்latest tamil news

ஒருபுறம் வறுமை விரட்டியது மறுபுறம் தொழு நோய் வாட்டியது இருந்தும் இந்த இரு புறத்தாக்குதலையும் பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் நடையாய் நடந்து தனது வீராவேச பேச்சால் தேசபக்திகனலை மூட்டி அந்த தியாக வேள்வியிலேயே தன்னை 41 வயதிலேயே கற்பூரமாக கரைத்துக் கொண்ட விடுதலைப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 138 வது பிறந்த நாள் நாளை வருகிறது.


சிவம் பேசினால் சவமும் வீறுகொண்டு எழும் என்றார் பாரதி அந்த அளவிற்கு பேச்சாற்றம் மிக்கவர் சிவா


வ.உ.சி.,யில் பலமே சிவாதான் இந்த சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காகவே உமக்கு ஒரு ஆயுள்தண்டனை கூடுதலாக கொடுக்கிறேன் என்று பின்ேஹ என்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.


latest tamil news

திண்டுக்கலம் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்திட்ட சிவாவிற்கு கல்லுாரி படிப்பை முடித்திட்ட கையோடு அரசு வேலை கிடைத்தது ஒரு நாள்தான் அங்கு வேலை பார்த்தார் நாற்காலியில் முடங்கிக்கிடப்பத்கு நாம் பிறக்கவில்லை என்பதை உணர்ந்து மறுநாளே அந்த வேலையை துாக்கிஎறிந்தார்.


பள்ளியில் படிக்கும் போதே ஏற்பட்ட தேசபக்தி அவரிடம் எழுத்தாகவும் பேச்சாகவும் வீறு கொண்டு எழுந்தது தனது நெருப்புக்கு நிகரான எழுத்தை பிரசுரிக்க அன்றைய ஊடகங்கள் அஞ்ச, தானே ‛ஞானபானு' ‛பிரபஞ்சமித்ரன்' ஆகிய பத்திரிகைகளை நடத்தினார்.தனித் தமிழில் கட்டுரை எழுதுவோருக்கு 5 ரூபாய் பரிசு என்று 1915-லேயே அறிவித்த தனித்தமிழ்ப் பற்றாளர்.


அதில் கட்டுரை எழுதியன் மூலம் அறிமுகம்பெற்ற பாரதியுடனும்,வ.உ.சி.,யுடனும் சிவா கைகோர்க்க தென்புலத்து தேசவிடுதலைப் போராட்ட சிங்கங்களாய் மூவரும் வலம்வந்தனர்.


ஒரு மேஜையும்,பெட்ரோமாக்ஸ் விளக்கும் இருந்தால் போதும் எடுத்துக் கொண்டு மக்கள் கூடுமிடத்திற்கு சென்றுவிடும் சிவா உரத்த குரலில் பாரதியின் பாடல்களை உணர்ச்சியுடன் பாடுவார் கூட்டம் கூடும் அதன்பிறகு அவருக்கே உரித்தான முறையில் வந்தே மாதரம் என்று முழங்கிவிட்டு ஆவேசம் பொங்க பேசி விடுதலைக்கான பேச்சை விதைப்பார்.அனல் வீசும் அவரது பேச்சைக்கேட்க இளைஞர்கள் கூட்டம் படையெனத் திரண்டது.


இப்படி பிரிட்டிஷ் அரசுக்கு அடிமடியில் கட்டிய நெருப்பாகவே இருந்த சிவாவை அடக்கிவைக்க பிரிட்டிஷாருக்கு இருந்த ஒரே ஆயுதம் கைது செய்வதும் சிறையில் அடைப்பதும்தான் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு 1908 ம் ஆண்டு முதல் 1912 ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார்.


சிறையில் ‛அடைக்கப்பட்டார்' என்று சொல்லக் காரணம் அவர் ஆடுமாடு போல அடைக்கப்பட்டார் என்பதனால் அங்கு அவருக்கு கடுமையான தண்டனை தரப்பட்டது உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாத வேலைகளைக் கொடுத்ததன் காரணமாக அவர் தொழு நோயில் விழுந்தார்.


இனி அவரை வெளியில் விட்டால் யாரும் சீந்துவாரற்ற நிலையிலேயே நடமாட முடியும், அவரும் நொந்து போயுள்ளார் இனி அந்த நொந்து போன உள்ளத்திற்குள் சுதந்திர வேள்வித்தீ எங்கு இருக்கப்போகிறது என்று பிரிட்டிஷ் அரசு கணக்கு போட்டது, அவர்களது கணக்கு இயல்பான மனிதர்களுக்கு வேண்டுமானால் பொருந்திப் போகலாம் ஆனால் வாழ்க்கையை சுதந்திரத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டுவிட்ட சிவா போன்றவர்களுக்கு பொருந்துமா?


சிறையில் இருந்து வெளியே வந்த சிவா தனது நோய் காரணமாக மக்களின்பரிதாபத்திற்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதற்காக உடல் முழுவதும் துணியால் போர்த்திக் கொண்டார் அந்த உடையுடனும் நோய்தாங்கிய உடலுடனும் மீண்டும் வீரமுழக்கங்களை தொடர்ந்திட்டார்.


‛கொடியதோர் வியாதி கொல்லுது என்னை' ஆனாலும் என் தேசத்தை நாசம் செய்யும் கொடியவர்களை தீயவர்களை நாட்டைவிிட்டு வெளியேற்றும் வரை ஒயமாட்டேன் ஒழியமாட்டேன் என்று தொடர்ந்து கனல் தெறிக்க பேசஆரம்பித்தார்.


வெளியே விட்டால் சிவா பேசிக்கொண்டேதான் இருப்பார் என்று மீண்டும் அவரை கைது செய்து இரண்டாம் முறையாக சிறயைில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு.இம்முறை சிறைக் கொடுமை இன்னும் அதிகரித்தது உடல் நிலை மோசமடைந்தது விட்டால் சிறகை்குள்ளேயே இறந்துவிடுவார் என்று எண்ணிய அரசு அவசரமாக விடுதலை செய்தது.


வெளியே வந்ததும் இழுத்து மூச்சு விட்டு நான் விடுதலை பெற்றுவிட்டேன் நாடு விடுதலை பெறுவது எப்போது என்று கேட்டு மீண்டும் தனது பிரச்சாரத்தை சிறை வாசலிலேயே ஆரம்பித்தார்.

தொழு நோய் காரணமாக இவர் பஸ்,ரயில் போன்ற வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது என்று அரசு தடைசெய்தது அதனால் என்ன நான் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறேன் என்று பல ஊர்களுக்கு நடந்தே சென்று பிரச்சாரம் செய்தார் நிறைய எழுதினார் தன் வாழ்நாளில் பாரதமாதாவிற்கு கோவில் கட்டவேண்டும் என்பதற்காக பாடுபட்டார் நண்பர்கள் உதவியுடன் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் நிலம் வாங்கி ஆசிரமம் நிறுவினார். அதற்கு 'பாரதபுரம்' எனப் பெயர் சூட்டினார். சர்வ மதத்தினரும் வழிபடும் வகையில் அங்கு பாரதமாதா கோயில் கட்ட முடிவு செய்தார். 'தேசபந்து' சித்தரஞ்சன்தாஸை அழைத்துவந்து அடிக்கல் நாட்டினார். ஒரு துறவியாக‛வீரமுரசு' என்ற அடையாளத்துடன் வாழ்ந்திட்ட சிவா தனது 41 வது வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார்.


வாழ்க நீ எம்மான்!


-எல்.முருகராஜ்-


-


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X