வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பள்ளி குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பதற்காக தமிழக அரசு சார்பில், கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டது. இத்தொலைக்காட்சி மூலமாக பள்ளி பாடங்களை ஆசிரியர்கள் செயல்முறையில் கற்பித்து வருகின்றனர். மாணவர்கள் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று அறிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாடத்தின் வழியாக திமுக அரசு மறைமுகமாக தங்களது கொடி நிறத்திலான காட்சிகளை பாடம் கற்கும் குழந்தைகள் மனதில் பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான வீடியோவில், மாணவர்களை இரு குழுக்களாக பிரிப்பது போன்ற எடுத்துக்காட்டுடன் ஒரு ஆசிரியை பாடம் எடுக்கிறார். அதில் முதலில் திமுக கட்சியின் நிறங்களான கருப்பு, சிவப்பு என காட்டப்படுகிறது. சில வினாடிகளுக்கு பிறகு அவை நீலம், சிவப்பாக மாற்றப்படுகிறது. மொத்த பாடத்தையும் நீலம், சிவப்பாகவே காட்டியிருக்கலாம், ஆனால் வேண்டுமென்றே குழந்தைகள் மனதில் பதியும் நோக்கில் திமுக கட்சி நிறங்களை புகுத்தியுள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹிந்தி உள்ளிட்ட எந்த ஒரு செயலையும் மாணவர்கள், மக்களிடையே புகுத்தக்கூடாது என தொடர்ந்து பேசி வரும் திமுக, பாடம் வாயிலாக கொடியை புகுத்துகிறது. தங்கள் கட்சி கொடியை எதிர்கால சந்ததியினரிடம் புகுத்துவதற்காக பின்வாசல் வழியாக அரசு டிவி மூலம் திமுக இந்த வேலையை செய்வதாக அதிமுக.,வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.