விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணா துரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'நான், 2021 சட்டசபை தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே, அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம், 11 மருத்துவ கல்லுாரிகளையும், நாமே திறந்து வைத்து விடுவோம் என்றேன்; அவர் என் பேச்சை கேட்கவில்லை.'எனக்கு அப்பவே சந்தேகம்; 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளோம். ஒரு வேளை மக்கள் மாற்றத்தை விரும்பினால், போச்சு என நினைத்தேன். ஆனால், நானே தோற்பேன் என்று நினைக்கவில்லை. என்னை தோற்கடிக்க, தி.மு.க., 'டீம்' ஒன்று, சென்னையில் இருந்து வந்து செயல்பட்டது' என்றார். மூத்த நிருபர், 'நீங்க ஒரு மஞ்ச வேட்டி ஞானி ஆச்சே... அதான் ஆட்சி தேறாதுன்னு, உங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு... அடுத்த முறையாவது தேறுமான்னு பழனிசாமிக்கு கொஞ்சம் முன்னாடியே ஜோசியம் பார்த்துச் சொல்லுங்க...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.