'எங்கள் தலைவர் மிகவும் சிரமப்பட்டு, கால் கடுக்க பாதயாத்திரை செல்கிறார்; அதை இப்படியா கிண்டலடிப்பது...' என, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் மீது ஆவேச மாக பாய்கின்றனர், கேரளாவில் உள்ள காங்., நிர்வாகிகள்.
இங்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் எம்.பி., ராகுல், நாடு முழுதும் உள்ள கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கேரளாவில் மட்டும், 18 நாட்கள் பாதயாத்திரை சென்றார். திருச்சூருக்கு சென்ற போது, அங்கு மிகவும் பிரபலமான பரோட்டாவையும், கட்டஞ்சாயாவையும் ருசித்தார்; இந்தப் புகைப்படத்தை, சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார்.கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர், ராகுலின் யாத்திரை எந்தெந்த ஊருக்கு செல்கிறதோ, அங்கெல்லாம் என்னென்ன வகையான உணவுகள் பிரபலமோ, அவற்றை குறிப்பிட்டு, 'இதையும் ருசி பாருங்களேன்...' என கிண்டலடித்து, போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். 'இங்கு யாத்திரை நடத்த வந்தீர்களா, சாப்பிட வந்தீர்களா...' என்ற போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இதைப் பார்த்து கொதித்த காங்., நிர்வாகிகள், 'ஒரு தேசிய கட்சியின் தலைவரை இப்படியா அவமதிப்பது, எங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புவராமலா போய் விடும்...' என, கொந்தளிக்கின்றனர்.