வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-கருணை அடிப்படையிலான வேலை என்பது சலுகையே தவிர, உரிமையல்ல என்று உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
![]()
|
கேரளாவில் உள்ள திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் பணியாற்றியபோது உயிரிழந்தவரின் மகள், கருணை அடிப்படையில் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதை நிறுவனம் நிராகரித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அவருடைய கோரிக்கையை ஏற்று கருணை அடிப்படையில் வேலை வழங்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், 1995ல் உயிரிழந்தார். அப்போது அவருடைய மனைவி வேலையில் இருந்ததால், கருணை அடிப்படையில் வேலை கேட்கவில்லை. அப்போது குழந்தையாக இருந்த அந்த ஊழியரின் மகள், தற்போது, கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
![]()
|
கருணை அடிப்படையிலான வேலை என்பது, ஒருவர் உயிரிழக்கும்போது, அவருடைய குடும்பம் வருமானத்துக்கு வழியில்லாமல் திண்டாட கூடாது என்பதற்காக வழங்கப்படுகிறது.வேலைவாய்ப்பில் சம உரிமை தர வேண்டும், சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றே என்று அரசியல் சாசனம் கூறுகிறது.
ஆனால், கருணை அடிப்படையிலான வேலை வழங்குவதில் அரசியல் சட்டத்தின், 14 மற்றும் 16ம் பிரிவுகள் இந்த நிபந்தனைகளை கூறவில்லை.கருணை அடிப்படையிலான வேலை என்பது ஒரு சலுகையே தவிர, அது உரிமையில்லை. அதனால், இந்தப் பெண்ணுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.