மும்பை,-மஹாராஷ்டிராவில் தசரா கொண்டாட்டத்தின்போது நடனமாடிய இளைஞர், மாரடைப்பில் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
அவரை மருத்துவமனைக்கு துாக்கிச் சென்ற தந்தையும், அதிர்ச்சியில் மரணம் அடைந்தார். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, பால்கர்மாவட்டம் விரார் நகரில்,மணீஷ் சோனிகரா, 35, என்பவர் நேற்று முன்தினம் இரவு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து நடனமாடினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். மாரடைப்பு காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது தந்தை நரப்ஜி சோனிக்ரா, 66, சக நண்பர்களுடன் இணைந்து, தன் மகனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றார்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நரப்ஜியும் திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், கடுமையான மாரடைப்பு காரணமாக அவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஒரு சில மணி நேரங்களிலேயே தந்தையும், மகனும் அடுத்தடுத்து மாரடைப்பு காரணமாக இறந்தது, அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.