விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஜாதிய வன்கொடுமை நடப்பதாக மாணவர்கள் கலெக்டர், முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.
சிவகாசி பேராபட்டி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கலெக்டர் மேகநாதரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் அளித்த மனு: எங்கள் பள்ளியில் பட்டியல் இன மாணவர்களை காலணி அணிந்து வரக்கூடாது, பள்ளியின் வாசலுக்கு வெளியே நின்று சாப்பிட வேண்டும் என்கின்றனர். மேலும் 2 கி.மீ., தூரம் சென்று குடிநீர் எடுத்து வருதல், குப்பை அள்ளுவது போன்றவற்றிலும் மாணவர்களை ஈடுபடுத்துகின்றனர்.
பள்ளி சார்பாக சுற்றுச்சூழல் மன்றம் நடந்துள்ளது. இதற்கு 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை மட்டும் அழைத்து சென்றனர். 10ம் வகுப்பு மாணவர்கள் அழைத்து செல்லப்படவில்லை. மாணவர்களை ஜாதியை சொல்லி ஆசிரியை திட்டுகிறார். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
சி.இ.ஓ., ஞானகவுரி கூறியதாவது:பள்ளியில் விசாரித்த வரை ஜாதிய நோக்குடன் ஆசிரியை நடந்ததாக பெரும்பாலானோர் கூறவில்லை. மாணவர் ஒருவர் பெற்றோர் விருப்பத்துடன் மாற்று சான்றிதழ் வாங்கி உள்ளார் என்பதற்காக ஆவணங்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரிக்கப்படும், என்றனர்.