புதுடில்லி, :பொது நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு தரப்படும் பிரதமர் விருதுகளுக்கு பிரத்யேக இணையதளத்தை, மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் நேற்று துவக்கி வைத்தார்.பொது நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றும் மாவட்டங்களுக்கு, பிரதமர் விருதுகளை மத்திய அரசு அளித்து வருகிறது. மொத்தம், 16 விருதுகள் அளிக்கப்படுகின்றன. தேர்வாகும் மாவட்டத்துக்கு விருது, சான்றிதழுடன், 20 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது.
மாற்றம்
இந்த விருதுக்கு என பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் நேற்று துவக்கி வைத்தார். விண்ணப்பிக்க விரும்பும் மாவட்டங்கள், அமைப்புகள் நவ., 28க்குள் www.pmawards.gov.in --என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இது பற்றி அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2014-க்குப் பின் பிரதமர் விருதுகளின் முழு வடிவமும் புரட்சிகரமான மாற்றத்திற்கு உட்பட்டுஉள்ளது.
வரவேற்பு
ஆக்கப்பூர்வமான போட்டி, புதுமை மற்றும் சிறப்பான நடைமுறைகளை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதில், பணியின் அளவை மதிப்பிடுவதை விட தரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2020 ஏப்., 1 முதல், 2022 செப்., 30 காலகட்டம் வரையிலான பொது நிர்வாக பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.