கோவை கேரளா கிளப்பில் நடந்த, இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், கலெக்டர் சமீரன் பங்கேற்றார். அப்போது ஓவியர் ஒருவர், பாட்டு பாடியபடி சில நிமிடங்களில், கலெக்டரின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து, அவரிடம் கொடுத்தார். 'மேஜிக் மேன்' ஒருவர், சில கார்டுகளை கலெக்டர் கையில் கொடுத்து, மேஜிக் செய்து காண்பித்தார்.
கலெக்டர் சமீரன், 'இந்த மேஜிக் எல்லாரும் செய்வது தான். நான், ஒரே நேரத்தில் இங்கேயும் இருக்கணும்; அங்கேயும் இருக்கணும். பிரச்னை ஏதாவது வந்தால், உடனே அந்த இடத்தில் இருந்து மறைய வேண்டும். அப்படி ஏதாவது, மேஜிக் இருந்தால் கற்றுக் கொடுங்கள்' என்றார். இதை சற்றும் எதிர்பாராத மேஜிக் மேன் திகைத்து நிற்க, மற்றவர்கள் சிரித்தனர்.பார்வையாளர் ஒருவர், 'ஆளும் தி.மு.க., ஒரு தொகுதி கூட ஜெயிக்காத கோவையில், கலெக்டரா இருப்பது எவ்வளவு சிரமம்னு, மேஜிக் மேன்கிட்ட கலெக்டர் கேட்டதுலயே நமக்கு நல்லா புரியுது...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.