''கைக்கு எட்டியது, வாய்க்கு கிட்டலையேன்னு வருத்தப்படுதாங்கல்லா...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''வருத்தப்படறது யார் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கிற முதல்வர் ஸ்டாலின், போலீசாருக்கு வார ஓய்வு திட்டத்தை அமல்படுத்தினாருல்லா... அதே சமயம், 'பாதுகாப்பு பணி, திருவிழா சமயங்கள்ல சூழ்நிலையை பொறுத்து தான் இந்த விடுப்பு தரப்படும்'னு அதிகாரிகள் நிபந்தனை விதிச்சிருந்தாவ வே...
''ஆரம்பத்துல போலீசார் பலரும் வார விடுப்பு எடுத்து, குடும்பத்தோட ஜாலியா இருந்தாவ... ஆனா, சில மாசங்கள் தான் இது நீடிச்சது... குறிப்பா, தென் மாவட்ட போலீசாருக்கு வரிசையா வேலை வந்துட்டே இருக்கு வே..
.''விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், இமானுவேல் குரு பூஜை, பி.எப்.ஐ., அமைப்புக்கு தடை, நவராத்திரி விழா, ஆர்.எஸ்.எஸ்., பேரணி பாதுகாப்பு, அடுத்து தீபாவளி பாதுகாப்பு, அக்., 30 தேவர் ஜெயந்தி பாதுகாப்புன்னு, தென் மாவட்ட போலீசார் நிற்க நேரமில்லாம ஓடிட்டு இருக்காவ... 'வார விடுப்பு எடுத்தே, பல மாசங்கள் ஆயிட்டு'ன்னு புலம்பிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பேரை சொன்னாலே, அதிர வைச்சிருக்காரு பா...'' என, அடுத்த தகவலை கையில் எடுத்தார் அன்வர்பாய்.''இது, ரஜினி பட டயலாக்காச்சே... விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், என்ன தான் முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமா இருந்தாலும், துறையில என்னவோ, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான் செல்வாக்கா இருக்காங்க... அமைச்சர் பேச்சை ஓரளவுக்கு தான் அதிகாரிகள் கேட்கிறாங்க பா..
.''இதை, முதல்வர் தரப்புக்கு அமைச்சர் நாசுக்கா சுட்டிக்காட்டியும், அதிகாரிகளை அசைக்க முடியலை... இதனால, அமைச்சர், தன் செல்வாக்கை அதிகரிக்க, பக்கா அரசியல்வாதியா மாறிட்டாரு பா..
.''அதாவது, அமைச்சர் பங்கேற்கிற அரசு நிகழ்ச்சிகளுக்கு, சில குறிப்பிட்ட பள்ளிகள்ல இருந்து மாணவ - மாணவியரை கூட்டிட்டு போறாங்க... ''நிகழ்ச்சியில அமைச்சர் பேரை சொன்னதுமே, மைதானமே அதிரும் வகையில மாணவ - மாணவியர் கைதட்டணும்னு சொல்லியே கூட்டிட்டு போறாங்க பா... டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துக்கிட்ட பள்ளிக்கல்வி துறை நிகழ்ச்சியிலதான் இந்த, 'டெக்னிக்'கை ஆரம்பிச்சாங்க... இப்ப நல்லாவே, 'ஒர்க் அவுட்' ஆகிட்டு இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்
.''கட்சி கூட்டத்தை கூண்டோடு புறக்கணிச்சுட்டா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...''தாம்பரம் மாநகர தி.மு.க., உட்கட்சி தேர்தல்ல ஜெயிச்ச நிர்வாகிகள் அறிமுக கூட்டம், மாநகர மாவட்ட செயலர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில சமீபத்துல நடந்துது... இந்த கூட்டத்தை, மாநகரை சேர்ந்த எட்டு பகுதி செயலர்கள் கூண்டோடு புறக்கணிச்சுட்டா ஓய்..
.''இவா எட்டு பேருமே, அமைச்சர் ஒருத்தரின், 'அன்பு'க்கு கட்டுப்பட்டவா... அமைச்சர் சொல்லாம, கார்த்தாலே டிபன் கூட சாப்பிட மாட்டாளாம்... 'அவர் உத்தரவுப்படி தான் கூட்டத்தை புறக்கணிச்சுட்டா'ன்னு மூத்த தொண்டர்கள் சொல்றா... ''அதனால, 'எட்டு பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பணும்'னு, மாநகர மாவட்ட செயலரிடம் மற்றவா வலியுறுத்திண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.பேச்சு முடிய, பெரியவர்கள் எழுந்தனர்.