வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை : மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 2016ல், 'தூய்மை பாரதம்' இயக்கம் திட்டம் துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் துாய்மை பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான ஆய்வு, 75வது சுதந்திர தின விழா நிறைவையொட்டி, துாய்மை அமிர்த பெரு விழாவாக நடத்தப்பட்டது; 4,354 நகரங்கள் பங்கேற்றன. மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களுக்கு விருது வழங்கும் விழா, சமீபத்தில் டில்லியில் நடந்தது. கோவை மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள நகரங்கள் பட்டியலில், கோவை மாநகராட்சி, 42வது இடத்தை பிடித்துள்ளது.

2017ல் கோவை, 16வது இடத்தில் இருந்தது. ஆனால், 2018ல், 14 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, 40வது ரேங்க் பெற்றது. 2021ல் நடந்த தர வரிசையில், 46வது இடமே கிடைத்தது. தற்போது நான்கு இடங்கள் மட்டும் முன்னேறி, 42வது ரேங்க் பெற்றிருக்கிறது. இதன் மூலம் நமது நகரம் சுகாதாரத்தை பேணிக்காப்பதில் மிகவும் பின்தங்கியிருப்பது, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது: நாடு தழுவிய தர வரிசை பட்டியலில், 42வது இடம் பெற்றிருக்கிறோம்; 4 இடங்கள் முன்னேறி இருந்தாலும், இதற்கு முன், 16வது இடத்தில் இருந்திருக்கிறோம். கழிப்பறை பராமரிப்பு மோசமாக இருக்கிறது. மக்கள் கருத்து கூறுவதில் பின்தங்கியிருக்கிறோம்.
தரம் பிரித்து குப்பை சேகரிப்பதை மேம்படுத்த வேண்டும்.குப்பையில் உரம் தயாரிக்கும் மையத்தை செயல்படுத்துவது; கட்டட கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.70 கோடிக்கு மதிப்பீடு தயாரித்திருக்கிறது. அடுத்த ஆண்டு, 20வது ரேங்கிற்குள் பெறும் அளவுக்கு திட்டங்கள் தயாரித்து, செயல்படுத்த முடிவு செய்திருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.