வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை : மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் வசிக்கும், 100 வயதுக்கு மேலானவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று, இந்திய தேர்தல் ஆணையர் எழுதிய பாராட்டு கடிதத்தை, தேர்தல் பிரிவினர் வழங்குகின்றனர்
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது: உங்களை போன்ற மூத்த வாக்காளர்களால், நமது நாடு ஜனநாயக நாடாக செழித்து ஒளிர்கிறது. இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதோடு, ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறீர்கள்.

நாட்டில் நிகழும் சமூகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்படும் கால மாற்றங்களுக்கு சாட்சியாக இருக்கிறீர்கள். உங்களது ஓட்டின் உண்மையான மதிப்பை நிரூபித்துள்ளீர்கள். உங்களின் வலிமை, உறுதி, நம்பிக்கைக்கு தேர்தல் ஆணையம் தலைவணங்குகிறது.80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் சக்கர நாற்காலி, சாய்தள பாதை, தன்னார்வலர்கள் உதவி, இலவச போக்குவரத்து வசதி மற்றும் வரிசையில் நிற்காமல் நேரடியாக ஓட்டளித்தல் போன்ற வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. படிவம் 12டி நிரப்பி, வீட்டில் இருந்தே ஓட்டளிக்கலாம்.
இவ்வசதியை பயன்படுத்தவும், இளம் வாக்காளர்கள் கடமையை செய்ய ஊக்கப்படுத்தவும், தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. இளம் தலைமுறையினரின் பங்களிப்புக்கு, முன்னுதாரணமாக திகழும் உங்களுக்கு நன்றி.இவ்வாறு, தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
இக்கடிதம் நகல் எடுக்கப்பட்டு, தேர்தல் பிரிவினர் மூலமாக முதியோர் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 80 வயதுக்கு மேல், 50 ஆயிரம் பேர் உள்ளனர். 100 வயதுக்கு மேற்பட்டோராக, 790 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று, தேர்தல் ஆணையர் எழுதிய பாராட்டு கடிதத்தை வழங்க, தேர்தல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, போத்தனுாரில் உள்ள புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும், 120 பேருக்கு கடிதம் வழங்கப்பட்டது.