வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுயானைகள் வருவதைத் தடுக்கும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள், அவற்றை தேவையின்றி கொடுமைப்படுத்துவதாக புகார்கள் குவிகின்றன.
கோவை நகரம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருப்பதுடன், மலையை ஒட்டியுள்ள பட்டா நிலப்பகுதிகளில் குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன. யானைகளின் வலசைப்பாதைகள் தடுக்கப்படுவதுடன், அவற்றின் மேய்ச்சல் பகுதிகளிலும் ஏராளமான கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதனால் காட்டுயானைகள், காலம் காலமாக நடந்து வந்த பாதைகள் மறைக்கப்பட்டுள்ளதால், யானைகள் விவசாய நிலங்களிலும், குடியிருப்புகளிலும் ஊடுருவுவது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
நிரந்தர தீர்வு காணாதது ஏன்?
வனத்தை ஒட்டிய பட்டா நிலங்களை, அவற்றுக்கு இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தி, வனப்பகுதியாக அல்லது வன நிலமாக மாற்றுவது போன்ற, நிரந்தரத் தீர்வுகளை அரசு எடுப்பதேயில்லை.ஒவ்வொரு தேர்தலின்போதும், யானை-மனித மோதல் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று, அனைத்து அரசியல் கட்சிகள் சார்பிலும் வாக்குறுதிகள் தரப்படுகின்றன. ஆனால் வழக்கம்போல எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இந்த ஆட்சியிலும் அதே நிலையே தொடர்கிறது. வனத்துறை அமைச்சர் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தும், இதற்காக ஒரு முயற்சியும் மேற்கொள்ளவேயில்லை. இந்நிலையில், யானைகளைத் துரத்துவதே, வனத்துறையினருக்கு பிரதான வேலையாகி விட்டது. காடுகளின் தரத்தைக் கூட்டுவது, வன ஆக்கிரமிப்பு, வன உயிரின வேட்டை போன்றவற்றைத் தடுப்பது, யானைகள் ரயிலில் அடிபடாமல் தடுப்பது போன்ற பணிகளை, வனத்துறையினரால் மேற்கொள்ள முடிவதேயில்லை. இப்போதுள்ள டி.எப்.ஓ.,அசோக் குமார், இந்தத் தடங்களை மீட்க, முயற்சி எடுப்பது பாராட்டுக்குரியது.

யானைகளுக்கு கொடுமை
இது ஒரு புறமிருக்க, சமீபகாலமாக, யானைகளை காட்டுக்குள் துரத்தும் பெயரில், அவற்றைக் கொடுமைப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக, கோவையில் சமூக ஊடகங்களில் வலம் வரும் காணொலி காட்சியில், யானைகளின் உடல் மீதும், கால்களுக்கு இடையிலும் இடைவிடாமல் பட்டாசுகளைத் துாக்கிப் போட்டு வெடிக்கச் செய்து, அவற்றை பீதிக்கும், கோபத்துக்கும் உள்ளாக்கி வருவது, கானுயிர் ஆர்வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வனக்கோட்டத்துக்குட்பட்ட கோவை, போளுவாம்பட்டி வனச்சரகப்பகுதிகளில், மருதமலை, தொண்டாமுத்துார், நரசீபுரம், ஆலாந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில், இந்தக் கொடுமை அதிகமாக நடப்பதாக தெரியவந்துள்ளது.
தன்னார்வலர்கள் பெயரில் சிலர், வனத்துறையின் கீழ்மட்ட அலுவலர்களை கூட்டணி சேர்த்துக் கொண்டு, இரவில் போதையில் ஜீப்களை எடுத்துக் கொண்டு, காட்டு யானைகளைத் துரத்தும் போது, இந்தக் கொடுமைகளை அரங்கேற்றுவதாக, விபரமறிந்த வனச்சரக பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வசூல் வேட்டை
யானைகளைத் துரத்துவதாகக் கூறி, விவசாயிகளிடமும், தனியார் நிறுவனங்களிடமும், வசூல் வேட்டை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.காட்டு யானைகளிடமிருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து காட்டு யானைகளையும் காப்பாற்றும் பொறுப்பு, வனத்துறையினருக்கு உள்ளது. அதற்காக, வனம், வன உயிரினங்கள் மீதான அறிவும் அக்கறையும் இல்லாத தன்னார்வலர்களை, இத்தகைய பணிக்கு ஈடுபடுத்துவது, வனத்துறைக்கே அவப்பெயரை ஏற்படுத்தும்.
இந்த அத்துமீறலுக்கு, உடனடியாகக் கடிவாளம் போட வேண்டியது வனத்துறை அதிகாரிகளின் அதிமுக்கியக் கடமையாகும்.கடந்த சில நாட்களாக, கோவையில் சமூக ஊடகங்களில் வலம் வரும் காணொலி காட்சியில், யானைகளின் உடல் மீதும், கால்களுக்கு இடையிலும் இடைவிடாமல் பட்டாசுகளைத் துாக்கிப் போட்டு வெடிக்கச் செய்து, அவற்றை பீதிக்கும், கோபத்துக்கும் உள்ளாக்கி வருவது, கானுயிர் ஆர்வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-நமது நிருபர்-