தமிழகத்தில் பா.ஜ.,வினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யும் தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சரிடம், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், புதுடில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மனு அளித்தார்.
வலியுறுத்தல்
இதன்பின் அவர் கூறியதாவது:தமிழகத்தில் சமீபகாலமாக பா.ஜ.,வினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பா.ஜ.,வினரின் வீடுகள், அலுவலகங்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. பா.ஜ., நிர்வாகிகள் பலர் பொய் வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தினோம்.
![]()
|
மேலும், சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாயிலாக தி.மு.க., அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. இது குறித்தும் அமைச்சரிடம் எடுத்துக் கூறினோம். ஹிந்து பெண்கள் குறித்து அவதுாறாக பேசிய தி.மு.க., - எம்.பி., ராஜா மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினோம்.
கோரிக்கை
இதேபோல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், இலங்கை திரிகோணமலையில் உள்ள திருக்கோனேஸ்வரர் கோவிலின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும்படி மனு அளித்தோம். மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தனியாக சந்தித்து மனு அளித்தோம். அதில், சத்ரபதி சிவாஜி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை அமைக்கும்படி கோரியிருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -