வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவில் சக்தி கொலு ஒன்பதாம் நாள் விழாவில், கவர்னர் ரவி பங்கேற்று வழிபட்டார்.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு, தினசரி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று அம்பாள், சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சக்தி கொலு நேற்றைய விழாவை, அர்ச்சகர்களின் மனைவியர் மற்றும் உபயதாரர்கள் இணைந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமகம், ஸ்ரீ சுக்தம் நடந்தது. பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது.
கவர்னர் பங்கேற்பு
தமிழக கவர்னர் ரவி, தன் மனைவி லட்சுமியுடன் சக்தி கொலு விழாவில் பங்கேற்க, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு நேற்று மாலை வந்தார். அவருக்கு கும்ப மரியாதையுடன், வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து, கோவில் முகப்பில் உள்ள விநாயகரை வழிபட்டார். பின், மூலவர் வடபழநி ஆண்டவரை தரிசித்த கவர்னர், மூலவருக்கு செய்யப்பட்ட அலங்காரத்தை பாராட்டினார்.

அடுத்ததாக, உற்சவரை தரிசித்த பின், சக்தி கொலு கண்காட்சிக்கு வந்தார். சக்தி கொலு வைக்கப்பட்ட விதம் குறித்து, வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் இல.ஆதிமூலம், கவர்னர் ரவிக்கு முழுமையாக விளக்கினார். சக்தி கொலுவில் ஒலியுடன் கூடிய கீதோபதேசம், முருகர் கோவில் விவரங்கள், பொம்மைகளின் விவரங்கள் ஆகியவற்றை பார்த்த கவர்னரும், அவரது மனைவியும் பொறுமையாக பார்வையிட்டு, பரவசமடைந்து வழிபட்டனர்.
நேற்று இரவு, ஸ்ரீமதி சைந்தவி பிரகாஷின் பக்திப் பாடல்கள், இசைக் கச்சேரி நடந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சக்தி கொலு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.சக்தி கொலு நிறைவு நாள் விழாவான இன்று, காலை, 9:15 மணிக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி துவங்குகிறது.