வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைந்துள்ள குருசடை தீவுக்கு சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்யும் போது துள்ளி குதிக்கும் டால்பின்கள், பவள பாறைகளை கண்டு ரசிக்கின்றனர்.
மன்னார் வளைகுடா கடலில், பாம்பன் தென் கடல் முதல் தூத்துக்குடி வரை கடலில் அமைந்துள்ள 22 தீவுகளை சுற்றிலும் அரிய வகை ஆமைகள், டால்பின்கள், கடல் குதிரை, கடல் அட்டை மற்றும் பவளைப் பாறைகள் என 400க்கு மேற்பட்ட உயிரினங்கள் வசிக்கின்றன. இதில் 21வது தீவான குருசடை தீவு 1995 வரை உயிரியல் பூங்காவாக இருந்தது.இங்குள்ள கடல் சார்ந்த உயிரினங்கள் ஆய்வு கூடத்தினால் ஆராய்ச்சி மாணவர்கள் பயனடைந்தனர். இதன் பின் சில காரணங்களால் ஆய்வுக் கூடத்தை அகற்றினர். அதன் பின் 22 தீவுகளை சுற்றிலும் மீன் பிடிக்க, மீனவர்கள் தங்கி வலைகளை உலர வைக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
![]()
|
படகு சவாரி
கடல்சார் உயிரினங்களின் சொர்க்க பூமியாக திகழும் குருசடை தீவில் என்ன தான் இருக்கிறது. அங்கு செல்ல முடியுமா, என பாம்பன் குந்துகாலில் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏக்கத்துடன் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கையை பரிசீலித்த வனத்துறை 2022 ஜன., முதல் குருசடை தீவுக்கு படகு சவாரியை துவக்கியது. அன்று முதல் குந்து காலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இங்கிருந்து 2 கி.மீ.,ல் கடலில் அமைந்துள்ள குருசடை தீவுக்கு படகில் லைப் ஜாக்கெட் வசதியுடன் குழந்தைகள் முதல் வயது மூத்தவர்கள் வரை பாதுகாப்பான ஜாலி டூர் செல்கின்றனர்.
இத்தீவில் உள்ள அழகிய கடற்கரை, பவள பாறைகள் மற்றும் படகில் செல்லும் போது துள்ளி குதித்து விளையாடும் டால்பின் மீன்களை கண்டு சுற்றுலா பயணிகள் பரவசம் அடைகின்றனர். இத்தீவுக்குள் நடந்து செல்லும் போது புதிய அனுபவத்தை பெற்று ரசிக்கின்றனர்.குருசடை தீவு சுற்றுலா படகு சவாரிக்கு நபருக்கு கட்டணம் ரூ.300. ராமேஸ்வரத்தில் இருந்து 14 கி.மீ.,ல் பாம்பனில் இருந்து 5 கி.மீ.,ல் குந்துகால் உள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து காலை 8:00 மணி, மதியம் 12:30 மணி, மாலை 5:15 மணிக்கு அரசு டவுன் பஸ் வசதி உண்டு. இது தவிர தனியார் ஆட்டோ, வேன் வசதியும் உள்ளது. எனவே லோ பட்ஜெட்டில் குடும்பத்துடன் மனநிறைவான டூர் செல்ல பாம்பன் குந்துகால் சிறந்த இடம். இன்னும் ஏன் தாமதம் புறப்படுங்கள் பாம்பன் குந்துகாலுக்கு... என்ஜாய் பண்ணுங்க...