வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை : தேசிய வங்கிகளை விட கூட்டுறவு வங்கி, கடன் சங்கங்களில் நகைக்கடனுக்கு கூடுதல் வட்டி விதிப்பதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தேசிய வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்குவதில்லை என கூட்டுறவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அனைத்து பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூறியதாவது: கேரளாவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் இரண்டடுக்கு முறையில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. நபார்டு வங்கியிலிருந்து குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி கூட்டுறவு வங்கிகள் குறிப்பிட்ட சதவீதம் வட்டி சேர்த்து நேரடியாக தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு கடன் வழங்குகின்றன.
![]()
|
இதனால் அங்கு நகைக்கடனுக்கான வட்டி விகிதம் குறைவு.தமிழகத்தில் மூன்றடுக்கு முறை பின்பற்றப்படுகிறது. நபார்டு வங்கியிருந்து 6 சதவீத வட்டிக்கு கடன் பெறும் கூட்டுறவு வங்கிகள் மாவட்ட வங்கிகளுக்கு 8 சதவீதத்தில் தருகின்றன.அங்கிருந்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு 8.5 சதவீத வட்டிக்கு அனுப்பப்படுகிறது. 3வது அடுக்கில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 9.5 சதவீத வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. கடைசியாக வாடிக்கையாளர்களுக்கு 11 சதவீத வட்டியில் நகைக்கடன் கிடைக்கிறது.தேசிய வங்கிகளில் இதில் பாதியளவு வட்டியே பயிருக்கான நகைக்கடனாக வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையான நகைக்கடனுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கின்றனர். இதற்கு 10 சென்ட் வீட்டடி மனையை காண்பித்து கூட கடனாக மாற்றுகின்றனர். ஆனால் கூட்டுறவு வங்கி, கடன் சங்கங்களில் 5 ஏக்கர் நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல், பயிர் சாகுபடி குறித்த தகவல்களை தந்தால் மட்டுமே பயிருக்கான நகைக்கடனாக ரூ.3 லட்சம் வரை குறைந்த வட்டிக்கு வழங்குகிறோம்.
எங்களிடம் கம்மல், தோடு, மூக்குத்தி போன்ற சிறு நகைகளை வைத்துக் கூட கடன்பெறலாம். ஆனால் வட்டி அதிகம் என்பதால் அடகுக்கடைகளுக்கு செல்கின்றனர். தேசிய வங்கிகளில் குறைந்தது ஒரு பவுன் அளவுக்கு இருந்தால் மட்டுமே நகைக்கடன் பெறமுடிகிறது. அங்கு வட்டி குறைவு என்பதால் வட்டிக்கு விடுபவர்கள் அங்கே செல்கின்றனர்.வட்டி ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான். எனவே அரசு இரண்டடுக்கு முறையை கொண்டு வருவதோடு பயிருக்கான நகைக்கடன் விதிமுறையில் தளர்வு அறிவிக்க வேண்டும் என்றனர்.