மதுரை : அ.தி.மு.க.,வின் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் தென்மாவட்டங்களில் 'நிர்ணயிக்கப்பட்ட' ஓட்டுகள் பன்னீர்செல்வம் நீக்கத்திற்கு பிறகு கேள்விக்குறியாகி உள்ளது.
அதை தக்க வைக்கும் முயற்சியாகதான் கடந்த செப்.,29ல் அரசியல் மையமான மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியது முதலே தென்மாவட்ட மக்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளித்து வந்தனர்.
இதனாலேயே தென்மாவட்டங்கள் 'அ.தி.மு.க.,வின் கோட்டை' என கூறப்படுகிறது. ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதும் அவரை தென்மாவட்டங்கள் ஏமாற்றவில்லை. மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் அ.தி.மு.க.,வுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தனர். இதனாலேயே அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் தந்தார். பன்னீர் செல்வத்தை தனக்கு பதிலாக முதல்வராக நியமித்தார். முக்குலத்தோர் தவிர யாதவர், நாடார், தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட சமூகத்தினரும் அ.தி.மு.க.,வுக்கு அரசியல் சூழல் மாற்றத்திற்கு ஏற்ப அவ்வப்போது ஆதரவு அளித்து வருகின்றனர்.
![]()
|
தேர்தலில் எதிரொலித்த 'அதிருப்தி'
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து முதல்வரான பன்னீர்செல்வம் 'தர்மயுத்தம்' நடத்த, கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த பழனிசாமியை சசிகலா, தினகரன் முதல்வராக்கினர். பின்னர் தனது அரசியல் 'சாணக்கிய' தனத்தால் சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, பன்னீர்செல்வத்தை பழனிசாமி சேர்த்துக்கொண்டார். முதன்முறையாக அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமை உருவானது.
ஆட்சியை தக்கவைக்க இருவரும் தங்களுக்கு இடையிலான மனக்கசப்பையும், அதிருப்தியையும் வெளிக்காட்டாமல் சமாளித்து வந்தனர். ஆனால் அந்த அதிருப்தி சட்டசபை தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலித்தது. ஆட்சி மாறியது. உள்ளாட்சி தேர்தலில் குறைந்தளவே 'சீட்'களை பெற முடிந்தது. அ.தி.மு.க., வலுவாக இருக்க ஒற்றைத்தலைமைதான் தேவை என பழனிசாமி ஆதரவாளர்கள் கொளுத்தி போட, பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. சட்ட போராட்டங்களுக்கு பிறகு நிர்வாகிகளின் ஆதரவுடன் கட்சியை பழனிசாமி கைப்பற்றினார். இருந்தாலும் 'நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க.,' என்று பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மல்லுக்கட்டி கொண்டிருக்கின்றனர்.
பழனிசாமிக்கு நிர்ப்பந்தம்
இதற்கிடையே 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலிலும், அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் கட்சிக்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டிய நிர்ப்பந்தம் அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளரான பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை இருப்பதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது என மார்தட்டிக்கொள்ளும் வகையில் இப்போதே அதற்கான முயற்சியை பழனிசாமி மேற்கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழக அளவில் மாநகராட்சி பகுதிகளில் 11.94 சதவீதம், நகராட்சி பகுதிகளில் 16.60 சதவீதம், பேரூராட்சிகளில் 15.82 சதவீதம் ஓட்டுக்களை அ.தி.மு.க., பெற்றது. 2011 சட்டசபை தேர்தலில் 38.4 சதவீதம், 2014 லோக்சபா தேர்தலில் 44.3 சதவீதம், 2016 சட்டசபை தேர்தலில் 40.8 சதவீதம், 2021 சட்டசபை தேர்தலில் 33.29 சதவீதம் பெற்றது. 2016 முதலே அ.தி.மு.க., ஓட்டுகள் குறிப்பாக தென்மாவட்டங்களில் சரிய தொடங்கின. ஜெயலலிதா மறைவுக்கு பின் 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஓட்டுக்களை தினகரனின் அ.ம.மு.க., பிரித்தது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அறிவித்தது, பா.ஜ.,வுடன் கூட்டணி போன்றவை தென்மாவட்டங்களில் அ.தி.மு.க.,வின் ஓட்டுகள் சரிய காரணம்.
இனி அடிக்கடி 'விசிட்'
கட்சியின் தென்மாவட்டத்தின் பிரதிநிதியாக இருந்தவர் பன்னீர்செல்வம் என்ற பிம்பத்தை உடைக்கும் முயற்சியாகவும், அ.தி.மு.க.,வுக்குண்டான ஓட்டு வங்கியை தக்க வைக்கவும் முயற்சியில் பழனிசாமி ஈடுபட்டுள்ளார். தேவர் ஜெயந்தியன்று பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த காத்திருக்கிறார். இனி அடிக்கடி தென்மாவட்டங்களுக்கு 'விசிட்' செய்து தனக்கான ஆதரவை திரட்ட திட்டமிட்டிருக்கிறார்.
தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள்
கட்சி நிர்வாகிககள் கூறியதாவது: தற்போதைய சூழலை வைத்து அ.தி.மு.க.,வின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியாது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படலாம். எங்களை பொறுத்தவரை தென்மாவட்டங்கள் எப்போதும் அ.தி.மு.க., கோட்டைதான்.அதை பாதுகாக்கும் வகையில் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைத்து 2016ல் ஜெயலலிதா தலைமையில் 39 தொகுதிகளையும் கைப்பற்றியது போல் 2024 தேர்தலிலும் கைப்பற்றுவோம். தி.மு.க., ஆட்சிமீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அது எங்களுக்கு சாதகமாக அமையும். அ.தி.மு.க., இழந்த ஓட்டுக்களை பழனிசாமி நிச்சயம் அறுவடை செய்து காட்டுவார். அதற்கான வேலைகளை அவர் தலைமையில் இப்போதே செய்ய ஆரம்பித்துவிட்டோம், என்றனர்.