ராமநாதபுரம் : தொண்டி அருகேயுள்ள காரங்காடு சதுப்புநிலக் காடுகளின் சொர்க்க பூமி, சூழல் சுற்றுலா மையத்தை சுற்றிப்பார்க்க தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநில, வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.மாணோலி தீவிலிருந்து ரைசோபோரா ஏபிகுலேட்டா மாங்குரோவ் செடி விதைகளை எடுத்துவந்து ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே கடலுார் பகுதியில் விதைக்கப்பட்டு நாற்றாக வளர்க்கின்றனர்.
கால்வாயை துார்வாரி சீரமைத்து மாங்குரோவ் காடு வளர்க்கப்படுகிறது. இதனால் வனப்பரப்பு அதிகமாகும், உயிரினங்கள் பெருகும், நிலத்தடி நீர் உவர்தன்மை மாறுகிறது. மாவட்டத்தில் தொண்டி காரங்காடு, திருப்புல்லாணி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 556 எக்டேர் பரப்பளவில் அலையாத்தி(சதுப்பு) நிலகாடுகள் உள்ளன.
'மாங்குரோவ்' பயன்
சுனாமியின் சீற்றத்தை தடுத்ததில் மாங்குரோவ் ( சதுப்புநில) காடுகளின் பங்கு மகத்தானது. கடற்கரையோரங்களில் கோடிகளை செலவிட்டு கொட்டப்படும் கான்கீரிட் கற்களைவிட ஆயிரம் மடங்கு மேலானவை அலையாத்திகாடுகள். நத்தைகள் சேறு, நண்டு சிங்கி, இறால் பால், கடற்புல், ஆக்காட்டி குருவி, வெண்கொக்கு, ஊரிநாரை கண்டற்சிப்பி, மீனினங்ககள் என ஆயிரக்கணக்கான உயிர்கள் உறைவிடமாக இருப்பவை.
![]()
|
அழகிய பறவைகளை பார்க்கலாம்
ராமநாதபுரம் மாவட்ட வனஉயிரின காப்பகம் வனரேஞ்சர் திவ்ய லட்சுமி கூறியதாவது: மாங்குரோவ் காடு வளர்ப்பத்தில் தனிக்கவனம் செலுத்துகிறோம். நடப்பாண்டில் வனகாப்பாளர் பகான் ஜக்தீஸ் சுதாகர் மேற்பார்வையில் 50 எக்டேர் வரை கூடுதலாக வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.தொண்டி காரங்காடு சுற்றுசூழல் மையத்தை காலை 11:00மணி முதல் மாலை 4:00மணி வரை சுற்றி பார்க்கலாம். மாங்ரோவ் காடு நடுவே 45 நிமிடங்கள் படகுசவாரியில் டுகாங் தீவில் இறக்கவிப்பட்டு கண்காணிப்பு கோபுரம் மேல் இருந்து பலவகையான உள், வெளிநாட்டு பறவைகளை கண்டுகளிக்கலாம்.
துடுப்பு படகு, மதிபடகு மூலம் கடலில் பயணம் செய்வதற்கு பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். செவ்வாய் விடுமுறை. இந்த சூழல் மையம் மூலம் கிடைக்கும் ஒரு பங்கு கிராம வளர்ச்சி மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது,'என்றார்.வாகன சத்தம், துாசி, அன்றாட பரபரப்பில் இருந்து சற்றே இளைப்பாற குறைந்த பட்ஜெட்டில் சிறந்த இடம் காரங்காடு.