ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில், 5 மணி நேரத்தில், 52 லட்சத்து, 81 ஆயிரம் பனை விதைகள் நட்டு, புதிய உலக சாதனை செய்யப்பட்டது.'எலேட் வேர்ல்ட் ரெக்கார்டு, ஏசியன் ரெக்காட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்காட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய நான்கு உலக சாதனைகளில் இடம் பெற வேண்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்கள், 288 கிராம ஊராட்சிகள், 880 இடங்களில் 52 லட்சத்து 81 ஆயிரத்து 647 பனை விதைகளை, 80 ஆயிரம் பேர் நட்டனர். இதற்கான பணி நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடந்தது.இதற்கான சான்றிதழை இந்த நிறுவன அதிகாரிகள், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோரிடம் நேற்று வழங்கினர்.கைத்தறி துறை அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:
பசுமை தமிழகம் திட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பசுமை பரப்பை, 33 சதவீதம் உயர்த்த மரம் நடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. பனை மரம் நிலத்தடி நீரை சேமித்து வறட்சி காலத்தில் பலன் அளிக்கும். தமிழகத்தில் 38 மாவட்டங்களில், 28 லட்சம் பனை மரங்கள் மட்டுமே உள்ளன.ஆனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 52.81 லட்சம் பனை மர விதைகள் நடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மரங்களை விட இரண்டு மடங்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் விதைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மூன்று மாதமாக, 50 லட்சம் பனை மர விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.