டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பவுரி கர்வால் பகுதியில் நேற்று(அக்., 04) இரவு திருமண விழாவிற்காக 46 பேருடன் சென்ற பஸ், பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதில் 25 பேர் உயிரிழந்த நிலையில் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இரங்கல்
இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு
உத்தரகண்டில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
பிரதமர் மோடி
உத்தரகண்டில் பஸ் விபத்து செய்தி மனதை பாதித்துள்ளது. இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நினைவாக எனது என்னங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும்.