தமிழகத்தில் அரிவாள் என்றாலே திருப்பாச்சேத்தி அரிவாள் தான், திருப்பாச்சேத்தி பகுதியில் தயாரிக்கப்படும் அரிவாள் உள்ளிட்ட இரும்பு விவசாய கருவிகள் தரத்திலும், உறுதியிலும், நீண்ட கால உழைப்பிலும் தன்னிகரற்றது எனலாம்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அரிவாள் தயாரிக்கின்றனர். மண்ணின் தன்மை, தேர்வு செய்யப்படும் இரும்பு, தொழில் நேர்த்தி ஆகியவற்றால் திருப்பாச்சேத்தி அரிவாள் புகழடைந்துள்ளது. வாரச்சந்தை மற்றும் பட்டறைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட அரிவாள் தற்போது ஆன்லைனிலும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரிவாளின் தரம், உறுதி, நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தயாரிப்பாளர் சந்திரசேகர் கூறுகையில்: மதுரையில் பழைய இரும்புகடையில் இருந்து கனரக வாகனங்களின் ஸ்பிரிங் பட்டைகளை தேர்வு செய்து அரிவாள், கத்தி, மண்வெட்டி, களைவெட்டி, கோடாரி உள்ளிட்டவை தயாரிக்கிறோம், நவீன வசதிகள் வந்தாலும் இன்றளவும் கரி அடுப்பு மூட்டி உடல் உழைப்பினால் அரிவாள் தயாரிக்கப்படுகிறது. சாதாரண விறகு வெட்டும் அரிவாள் முதல் கருப்பண்ணசாமிக்கு நேர்த்தி கடனாக செலுத்தப்படும் 18 அடி உயரம் வரை அரிவாள் தயாரிக்கப்படுகிறது.
அரிவாள் தயாரிக்க குறைந்தபட்சம் இரண்டு பேர் முதல் ஐந்து பேர் வரை தேவைப்படும், கரி அடுப்பில் இரும்பை சூடுபடுத்தி தட்டி தட்டி அருவா செய்கிறோம், தற்போது ஆன்லைனிலும் அரிவாள் விற்பனை செய்ய முடிவு செய்து அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளோம், என்றார்.ஆன்லைனில் அரிவாளின் நீளம், அகலம், எடை உள்ளிட்டவை குறிப்பிடப்படும், வீடுகளில் தேங்காய் உடைக்க , தோட்டங்களை சீர் செய்ய, மரங்களை வெட்டி சீர் செய்ய வெவ்வேறு அளவுகளில் அரிவாள் தயாரிக்கின்றனர்.