பிலாஸ்பூர்: ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் பிரதமர் மோடி இன்று (அக்.,5) திறந்து வைத்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, பசுமை மருத்துவமனையாக அறியப்படும் என மோடி தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் கடந்த 2017ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (அக்.,5) திறந்து வைத்தார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் ரூ.1470 கோடிக்கும் அதிகமான செலவில் 18 சிறப்புப் பிரிவுகள், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 சிறப்பு ஆபரேஷன் தியேட்டர்கள், 750 படுக்கைகள், 64 ஐசியு படுக்கைகளுடன் கூடிய அதிநவீன மருத்துவமனையாக உருவாக்கப்பட்டுள்ளது.
பின்னர், ரூ.3,650 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மோடி உரையாற்றியதாவது: கடந்த 8 ஆண்டுகளில், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி திட்டங்கள் சென்றடைய நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஹிமாச்சலின் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, குறைந்த விலையில் மருத்துவ சேவையை அதிகரிப்பது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு உகந்தவாரும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை 'பசுமை மருத்துவமனை'யாக அறியப்படும்.

ஒரு மத்திய பல்கலைக்கழகம், ஒரு ஐஐடி, ஒரு ஐஐஎம் மற்றும் தற்போது பிலாஸ்பூர் எய்ம்ஸ் ஹிமாச்சலுக்கு பெருமை சேர்க்கும். ஹிமாச்சலில் நாம் ஊக்குவிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான துறை மருத்துவ சுற்றுலா. உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இந்தியாவுக்கு வரும்போது,உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகள் மற்றும் ஆரோக்கியமான சூழலுடன் முழுமையான சிகிச்சைக்காக ஹிமாச்சலத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.