விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு போதை வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எருமனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சபரிநாதன், 31. இவரது சகோதரி கலைச்செல்வி திருமணமாகி, அதே பகுதியில் வசிக்கிறார்.அவர், நேற்று முன்தினம் சபரிநாதனுக்கு சொந்தமான இடத்தில் இருந்த கருவேல மரங்களை வெட்டியுள்ளார். ஆத்திரமடைந்த சபரிநாதன், கலைச்செல்வியை குடிபோதையில் சரமாரியாக தாக்கினார்.
இது குறித்து கலைச்செல்வி விருத்தாசலம் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு போலீசார் விசாரணைக்காக சபரிநாதன் வீட்டிற்கு சென்றனர். அவர் குடிபோதையில் இருந்ததால், அவரது மனைவியிடம், நாளை (நேற்று) காலை சபரிநாதனை ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு கூறிச் சென்றனர்.இது குறித்து நேற்று காலை சரிபரிநாதனிடம், அவரது மனைவி கூறியுள்ளார்.
அப்போதும் குடிபோதையில் இருந்த அவர், விருத்தாசலம் ஸ்டேஷனுக்கு வந்து, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.உடன், அங்கிருந்த போலீசார் அவரை மீட்டனர். அப்போது உடலில் எரிச்சல் அதிகமாக உள்ளதாக கூறி, சபரிநாதன் கதறினார். இதையடுத்து போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி, சோப்பு போட்டு குளிப்பாட்டி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற போதை வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Advertisement