வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், தன்னுடைய கட்சியை வழிநடத்தும்படி கேட்டதாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பீஹார் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தேர்தல் வியூக நிபுணராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர், கடந்த 2018-ல் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அடுத்த சிறிது நாட்களிலேயே கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவியும் பிரசாந்த் வசம் வந்தது. அதன்பின்னர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட சில கருத்துவேறுபாடால் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் விலகினார்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அவர் அரசியல் ஆலோசனை வழங்கினார். இந்த நிலையில் பீஹாரில் கடந்த அக்.,2 முதல் 3500 கி.மீ தூரத்திற்கு 'ஜன் சுராஜ்' என்ற விழிப்புணர்வு பிரச்சார நடைப்பயணம் செய்து வருகிறார்.
நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: 2014 லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த பிறகு நிதிஷ் குமார் என்னை அழைத்து உதவி கேட்டார். இதனையடுத்து 2015 சட்டசபைத் தேர்தலில் 'மகாத்பந்தன்' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற அவருக்கு நான் உதவினேன். இன்று, எனக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு அவருக்கு மன உறுதி உள்ளது. நாடு முழுவதும் எனது திறமையை நிரூபித்த பிறகு இப்போது எனது சொந்த மாநிலத்தில் வேலை செய்ய முயற்சிக்கிறேன்.

10 - 15 நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமார் என்னை அவரது இல்லத்திற்கு அழைத்தார் என்பது ஊடகங்கள் வாயிலாக அனைவருக்கும் தெரியும். அப்போது அவர் தனது கட்சியை வழிநடத்தும்படி என்னிடம் கேட்டார். ஆனால், அது சாத்தியமில்லை என்று நான் கூறிவிட்டேன். ஏனெனில், 3,500 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கிராமங்களில் உள்ளவர்களை சந்திப்பேன் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்தேன். எனவே, எந்தப் பதவிக்காகவும் நான் செய்த உறுதிப்பாட்டை என்னால் திரும்பப் பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.