சென்னை:''தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல; ஆன்மிகத்தை அரசியலுக்கும், சுயநலத்திற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது,'' என, வள்ளலார் முப்பெரும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வள்ளலாரின் 200வது பிறந்த நாள்; அவரது தர்மசாலை துவக்கத்தின் 156 ஆண்டு; அவர் ஏற்றிய தீபத்தின் 152 ஆண்டு ஆகியவற்றை, முப்பெரும் விழாவாக, அறநிலையத்துறை ஓராண்டிற்கு கொண்டாட உள்ளது.
அதன் துவக்க விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.அன்னதான திட்டம்விழாவில், வள்ளலார் முப்பெரும் விழா 'லோகோ' மற்றும் அஞ்சல் உறை, விழா மலர், முதல் வார விழா, ஆண்டு முழுதும் அன்னதானத் திட்டம் ஆகியவற்றை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஈ.வெ.ரா., பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்த தி.மு.க., அரசு, வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்துள்ளது.
வள்ளலார் தொடர்பான முப்பெரும் விழாவை நாம் நடத்துவது சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். சிலர் சொல்லும் அவதுாறுக்கு பதில் கூறும் விழா இது. தி.மு.க., ஆட்சி ஆன்மிகத்திற்கு, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று, மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் கூறி வருகின்றனர்.தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல;, அதை அரசியலுக்கும், சுயநலத்திற்கும், உயர்வு தாழ்வு கற்பிக்கவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது.
கோட்டைக்கு வருவதை விட கோவில்களுக்கு அதிகம் செல்பவர் அமைச்சர் சேகர்பாபு. ஆன்மிக செயற்பாட்டாளரான அவர், அறப்பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை அதிகம் கவனித்து வருகிறார். அறநிலையத் துறைக்கு அவர் ஆற்றும் பணியை மக்கள் பாராட்டுவது தான் சிறப்பு.
வள்ளலாரை போற்றுவது திராவிட ஆட்சியின் கடமை. ராமலிங்கர் பாடல் திரட்டு நுாலை, 1940ம் ஆண்டில் ஈ.வெ.ரா., வெளியிட்டார். வள்ளலார் நகரை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.முப்பெரும் விழாதேர்தல் அறிக்கையின் படி, வடலுார் வள்ளலார் சர்வதேச மையத்தை, 100 கோடி ரூபாயில் அமைப்பது குறித்து, வல்லுனர் குழு ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அதற்கான வரைவு திட்டப்பணி நடந்து வருகிறது.
வள்ளலார் முப்பெரும் விழா, 52 வாரங்கள் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. ஓராண்டிற்கு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் உள்ளிட்ட தேவைக்கு, 3.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தன் கொள்கைக்காக சமரச சன்மார்க்க சங்கம் துவக்கியவர் வள்ளலார். பசிப்பிணி தவிர்த்தார். அவரின் வழி நடக்கும் இந்த அரசு, பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
பசிப்பிணி போக்குதலும், அறிவு பசி நீக்குவது இந்த அரசின் முதன்மை கொள்கை. இவ்வாறு முதல்வர் பேசினார்.விழாவில், அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், சுப்பிரமணியன், எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்.எல்.ஏ., வேலு, விழாக்குழு தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்திருந்தார்.