பிராட்வே, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொடர்பு கொண்டவர், தன்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமீர் என்றும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் கூறி, இணைப்பை துண்டித்தார்.
இது குறித்து விசாரித்த பூக்கடை தனிப்படை போலீசார், தாம்பரத்திற்கு சென்று அமீரை பிடித்து விசாரித்தனர்.இதில், அவருக்கும் வெடிகுண்டு மிரட்டலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரிந்தது.
பின், கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பு எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர் 6வது தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 34, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில், அமீர் வேலை செய்யும் குரோம்பேட்டையில் உள்ள லாட்ஜில், ரவிச்சந்திரன் ஆறு மாதத்திற்கு முன் பணி செய்துள்ளார்.அப்போது, அமீர் காதலிக்கும் பெண்ணை, ரவிச்சந்திரன் ஒருதலையாக காதலித்துள்ளார்.
இது, அமீருக்கு தெரியவர, ரவிச்சந்திரனை கண்டித்து வேலையை விட்டு நிறுத்தினார்.இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், அமீரை சிக்க வைக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.மேலும், ரவிசந்திரன் பயன்படுத்திய 'சிம் கார்டு' மின்சார ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட மொபைல் போனை, ரவிச்சந்திரன் எடுத்ததோடு, அதில் இருந்து மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.