திருச்சி,:திருச்சியில், குணசீலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இணையானதாக கருதி, அங்கு செல்ல இயலாதவர்கள் குணசீலம் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசிக்கின்றனர். இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ தேரோட்டம் நடைபெறும். அதன்படி, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது.
அன்று முதல், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நடைபெற்றது. முன்னதாக, காலை 5:30 மணிக்கு, சுவாமி உபயநாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளினார். காலை 9:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், முசிறி தி.மு.க., - எம்.எல்.ஏ., தியாகராஜன் மற்றும் அறநிலையத்துறையினர் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் 'கோவிந்தா' கோஷத்துடன் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.